பீகார் தர்பங்காவில், பெண்கள் திட்ட நிதி தவறுதலாக ஆண்களின் கணக்கிற்குச் சென்றது. தேர்தலுக்குப் பின் பணத்தைத் திரும்பக் கேட்ட அதிகாரிகளிடம், "எங்கள் வாக்குகளைத் திருப்பித் தந்தால், பணத்தைத் தருகிறோம்" எனக் கூறுகின்றனர்.
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில், பெண்களுக்கு வழங்கப்பட்ட அரசு நிதியுதவி தவறுதலாக ஆண்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்ற நிலையில், அதைத் திரும்பப் பெறச் சென்ற அதிகாரிகளுக்குக் கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
"வாக்குகளைத் திருப்பித் தாருங்கள்!"
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த செப்டம்பர் 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் 'முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்' (Mukhyamantri Mahila Rojgar Yojana) தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சுமார் 1.40 கோடி பெண் தொழில்முனைவோரின் வங்கிக் கணக்குகளில் தலா ₹10,000 வரவு வைக்கப்பட்டது.
ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தர்பங்கா மாவட்டத்தின் ஜாலே (Jale) பிளாக்கிற்கு உட்பட்ட சில ஆண்களின் வங்கிக் கணக்குகளுக்கும் இந்தப் பணம் தவறுதலாகச் சென்றுள்ளது. தற்போது அந்தப் பணத்தைத் திரும்ப ஒப்படைக்குமாறு 'ஜீவிகா' (Jeevika) அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
"இது ஓட்டுக்குக் கொடுத்த பணம்!"
அரசு அனுப்பிய நோட்டீஸுக்குப் பதில் அளித்துள்ள கிராம மக்கள், "முதலில் நாங்கள் உங்களுக்குப் போட்ட வாக்குகளைத் திருப்பித் தாருங்கள், பிறகு பணத்தைத் தருகிறோம்" என ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர்.
"அரசு தவறுதலாகப் பணம் அனுப்பியிருந்தால், ஏன் மூன்று மாதங்கள் கழித்து இப்போது கேட்கிறது? நாங்கள் வாக்களித்து என்.டி.ஏ (NDA) கூட்டணி வெற்றி பெற்ற பிறகு இப்போது பணத்தைக் கேட்கிறார்கள். அந்தப் பணத்தை தீபாவளி மற்றும் சத் பூஜையின் போது துணிகள் வாங்கவும், வீட்டுத் தேவைகளுக்கும் செலவு செய்துவிட்டோம். இப்போது திருப்பித் தர எங்களிடம் வசதி இல்லை." என விவசாயத் தொழிலாளி நாகேந்திர ராம் கூறியுள்ளார்.
"எனக்கு சொந்த நிலம் இல்லை. அரசு நிலத்தில்தான் வசிக்கிறேன். வந்த பணத்தில் குடும்பத்திற்காக வாத்துகளையும், இரண்டு ஆடுகளையும் வாங்கினேன். இப்போது அதை எப்படித் திருப்பித் தருவது?" என கட்டுமானத் தொழிலாளி பலிராம் சஹானி கேள்வி எழுப்பினார்.
"அரசுக்கு எங்கள் பணம் திரும்ப வேண்டுமென்றால், அவர்கள் எங்கள் வாக்குகளைத் திரும்பத் தர வேண்டும்" என்று கிராமத்தைச் சேர்ந்த பிரமீளா தேவி தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளின் தரப்பு
தர்பங்கா ஜீவிகா அதிகாரி கூறுகையில், இதுவரை 14 ஆண்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் பணத்தைத் திரும்பச் செலுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
"தொழில்நுட்பக் கோளாறால் பணம் தவறுதலாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுவிட்டது, அதை மீட்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன," என்று அவர் கூறினார்.


