பீகார் SIR பணியில் 5 லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கத் தவறிவிட்டதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டியுள்ளது.
பீகார் மாநிலத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் (SIR) 5 லட்சத்திற்கும் அதிகமான இரட்டை வாக்காளர்களை நீக்கத் தவறியதாகக் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆவணங்களைத் தயார் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms - ADR) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தபோது தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்ய பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தக் கருத்தைத் தெரிவித்தது.
5 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்படவில்லை
ஏ.டி.ஆர். சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் முக்கிய வாதங்களை முன்வைத்தார்.
அக்டோபரில் மனுதாரர் யோகேந்திர யாதவ் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விளக்கக்காட்சி மூலம் சுட்டிக்காட்டப்பட்ட இரட்டைப் பெயர்கள் கூட, சிறப்புத் தீவிர திருத்தம் முடிந்த பிறகு தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன.
"ஆச்சரியப்படத்தக்க பிடிவாதத்துடன், தேர்தல் ஆணையம் தன்வசம் உள்ள, போலிகளை நீக்கும் மென்பொருளை (deduplication software) வாக்காளர் பட்டியலில் பயன்படுத்த மறுக்கிறது. இது 5 லட்சம் இரட்டை வாக்காளர்களை நீக்க உதவும்," என்று பூஷண் கூறினார்.
பீகாரில் நடைபெற்ற சிறப்புத் தீவிர திருத்தப் பணி ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தது. ஏனெனில், இறுதிப் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ தாங்கள் கடைப்பிடித்த செயல்முறை குறித்த விவரங்களை ஆணையம் வெளியிட மறுத்துவிட்டது.
குடியுரிமையை நிர்ணயிக்கும் அதிகாரம் இல்லை
இந்தச் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின் முக்கிய நோக்கம் வாக்காளர் பட்டியலில் இருந்து வெளிநாட்டினர் மற்றும் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களை நீக்குவது என்றாலும், ஒரு வாக்காளரின் குடியுரிமையை நிர்ணயிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு ரீதியாகவோ, சட்டரீதியாகவோ அல்லது நீதித்துறை ரீதியாகவோ வழங்கப்படவில்லை என்று பூஷண் வாதிட்டார்.
ஒரு வாக்காளரின் குடியுரிமை குறித்துச் சந்தேகம் ஏற்பட்டால், அந்த வழக்கைத் தகுதியான அதிகார அமைப்புக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கலாம். அந்த அமைப்பு இறுதி முடிவை எடுக்கும் வரை, ஒரு நபர் தான் இந்தியக் குடிமகன் என்று உறுதிமொழி அளித்திருந்தால், அவரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியாது என்றும் பூஷண் வலியுறுத்தினார்.
தேர்தலை நடத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் பொதுவான அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள போதிலும், சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அப்பால் ஆணையம் செயல்பட முடியாது என்று மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷோப் ஆலம் வாதிட்டார்.
தேர்தல் ஆணையம் நிரூபிக்க வேண்டும்
மனுதாரர்களின் வாதங்களைக் கேட்டறிந்த நீதிமன்றம் "தேர்தல் ஆணையம் இந்தக் கூற்றுகளுக்குப் பதிலளிக்க வேண்டும். உங்கள் ஆவணங்களைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். தேர்தல் ஆணையம், சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்காகத் தானே வகுத்துள்ள விதிகள் மற்றும் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றியுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும்." என தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் எக்லவ்ய துவிவேதியிடம் அறிவுறுத்தியுள்ளது.
தாங்கள் வகுத்துள்ள விதிகள், விதிமுறைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் அனைத்தும் முழுமையாகப் பின்பற்றப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணையம் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளதாக துவிவேதி தெரிவித்தார்.


