வேகமாக மாறிவரும் உலகில் இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு ஒரு "துருவ நட்சத்திரம்" போல் நிலைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இருதரப்பு உச்சி மாநாட்டில் 2030 வரை பொருளாதார ஒத்துழைப்புத் திட்டம் இறுதியாகியுள்ளது என்றும் கூறினார்.

வேகமாக மாறிவரும் உலகில் இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு ஒரு "துருவ நட்சத்திரம்" (North Star) போல் நிலைத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் இணைந்து கூட்டாக செய்தியாளர் சந்திப்பை நடத்தியபோது, இந்த உறவை மேலும் வலுப்படுத்த 2030 ஆம் ஆண்டு வரையிலான ஒரு பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்தியா-ரஷ்யா உறவு துருவ நட்சத்திரம் போன்றது

"என் நண்பர் அதிபர் புடின் அவர்களையும், இரு நாட்டுப் பிரதிநிதிகளையும் 23வது இந்தியா-ரஷ்யா இருதரப்பு உச்சி மாநாட்டிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 25 ஆண்டுகளுக்கு முன்பு, அதிபர் புடின் அவர்கள்தான் நமது மூலோபாயப் கூட்டுறவுக்கு அடித்தளம் அமைத்தார்."

"கடந்த எட்டு தசாப்தங்களில் (80 ஆண்டுகள்) உலகம் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளது. இருப்பினும், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நட்பு ஒரு துருவ நட்சத்திரம் போல நிலைத்திருக்கிறது. இந்த உறவு பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது." என்று கூறிய பிரதமர் இந்த உறவை வலுப்படுத்த உதவும் அனைத்துக் காரணிகள் குறித்தும் இன்று விரிவாக விவாதித்ததாகத் தெரிவித்தார்.

ரஷ்யர்களுக்கு இ-விசா

"ஆற்றல் பாதுகாப்பு (Energy security) நமது கூட்டணியின் ஒரு வலுவான தூணாக உள்ளது. பரஸ்பரம் நன்மை பயக்கும் இந்த ஒத்துழைப்பை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம். அணுசக்தி ஒத்துழைப்பு பல தசாப்தங்களாக நீடித்து, தூய்மையான சக்திக்கு பங்களித்து வருகிறது."

முக்கியமான கனிமங்களில் (critical minerals) நமது ஒத்துழைப்பு, பல்வகைப்பட்ட மற்றும் நம்பகமான உலகளாவிய விநியோகச் சங்கிலியைப் பராமரிப்பதற்கு அவசியம்.

"வரும் நாட்களில் ரஷ்ய குடிமக்களுக்கு 30 நாட்கள் இலவச இ-சுற்றுலா விசா மற்றும் 30 நாட்கள் குழு சுற்றுலா விசாவை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது."

தடையற்ற எரிபொருள் விநியோகம்

இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்கள், பிரதமர் மோடிக்கும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கும் தங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார்.

வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தின் தேவைகளுக்காக, ரஷ்யா தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றி தொடரும் என்றும் அவர் உறுதி அளித்தார்.