பீகார் அமைச்சர் நிதின் நபின், பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் நாடாளுமன்ற வாரியம் இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசியச் செயல் தலைவராக (National Executive President) பீகார் அமைச்சரான நதின் நபின் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது.
தற்போதைய செயல் தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி அமோக வெற்றி பெற்றதில் இவர் முக்கியப் பங்காற்றி இருக்கிறார். அதற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கட்சித் தலைமை அவரை தேசியச் செயல் தலைவராக நியமனம் செய்துள்ளது.
பாஜக தேசியச் செயல் தலைவர்
பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவில், இந்த நியமனத்திற்கு கட்சியின் நாடாளுமன்ற வாரியம் (Parliamentary Board) ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவில், "பீகார் அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகிக்கும் திரு. நதின் நபின், பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயல் தலைவராக பாஜக நாடாளுமன்ற வாரியத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பதவியும் பொறுப்பும்
நதின் நபின் தற்போது பீகார் மாநிலத்தில் அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். இவர் பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (BJYM) தேசிய பொதுச் செயலாளராகவும், பீகார் மாநிலத் தலைவராகவும் முன்னர் பணியாற்றியுள்ளார்.
தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பதவிக்கு நதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், கட்சியின் கட்டமைப்பில் அவருக்கு முக்கியப் பங்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பொறுப்பை அவர் உடனடியாக ஏற்றுச் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு முறை வெற்றி
இவர் பீகாரின் பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர். நான்கு முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிதின் நபின் பீகார் தனது அரசியல் பயணத்தைத் தனது தந்தை நவீன் கிஷோர் சின்ஹாவைத் தொடர்ந்து பாட்னா மேற்கு தொகுதியில் தொடங்கினார்.
தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு, பாங்கிபூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.


