ராஜஸ்தான் இடைத்தேர்தல்: பாஜக அமைச்சரை தோற்கடித்த காங்கிரஸ் வேட்பாளர்!

ராஜஸ்தான் மாநிலம் கரன்பூர் இடைத்தேர்தலில் பாஜக அமைச்சரை தோற்கடித்த காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி  பெற்றுள்ளார்

Rajasthan Karanpur assembly by election congress candidate win over BJP minister smp

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை மொத்தம் 200 தொகுதிகளை கொண்டது. வேட்பாளர் ஒருவரின் மறைவை அடுத்து 199 தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று  முடிந்தது. அதில் பதிவான வாக்குகள் கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதில், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீழ்த்தி பாஜக அமோக வெற்றி பெற்றது. பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 69 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, அம்மாநில முதல்வராக முதன்முறை எம்.எல்.ஏ. பஜன்லால் ஷர்மா பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில், நவம்பர் 25ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறாத கரன்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் ருபிந்தர் சிங் கூனரும், பாஜக சார்பில் அமைச்சர் சுரேந்தர் பால் சிங்கும் களம் கண்டனர்.

காங்கிரஸ் வேட்பாளர் ருபிந்தர் சிங் கூனர், முன்னாள் எம்.எல்.ஏ. குர்மீத் சிங் கூனரின் மகன் ஆவார். குர்மீத் சிங் கூனரின் மறைவையடுத்தே, கரன்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், 81.38 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, கரன்பூர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், சுமார் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக அமைச்சர் சுரேந்தர் பால் சிங்கை, காங்கிரஸ் வேட்பாளர் ருபிந்தர் சிங் கூனர் தோற்கடித்துள்ளார்.

செந்தில் பாலாஜி வழக்கு: நீதிபதி கோபத்துக்கு ஆளான அமலாக்கத்துறை!

தேர்தலில் வெற்றி பெற்ற ருபிந்தர் சிங் கூனருக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், அவரது தந்தை குர்மீத் சிங் கூனரின் பொது சேவைப் பணிகளுக்காக வெற்றியை அர்ப்பணித்தார். கரன்பூர் மக்கள் பாரதிய ஜனதா கட்சியின் பெருமையை தோற்கடித்துள்ளனர் என்று கெலாட் கூறினார். தேர்தல் நேரத்தில் வேட்பாளரை அமைச்சராக்கியதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பாஜகவுக்கு பொதுமக்கள் பாடம் புகட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுரேந்தர் பால் சிங், எம்எல்ஏ ஆவதற்கு முன்பே அவரை அமைச்சராக்கியதன் மூலம் வாக்காளர்களை குழப்ப முயற்சிப்பதாக பாஜக மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்திருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தகக்து.

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதும், தன்னிச்சை பெறுப்புடன் மாநில அமைச்சராக சுரேந்தர் பால் சிங் நியமிக்கப்பட்டார். அவருக்கு சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் வக்ஃப் துறை உட்பட நான்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில், அவர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளதால், அமைச்சர் பதவியை இழக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios