செந்தில் பாலாஜி வழக்கு: நீதிபதி கோபத்துக்கு ஆளான அமலாக்கத்துறை!
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை விசாரித்த நீதிபதி அமலாக்கத்துறை மீது கோபமடைந்தது கவனம் ஈர்த்துள்ளது
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. இதனையடுத்து, செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் தர முடியாது என கூறி அவருக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும், மருத்துவ ஜாமீன் மனுவை திரும்பப் பெற்று, வழக்கமான ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறும், அங்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதன்படி, செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் கோரி 3ஆவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கானது கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஜனவரி 8ஆம் தேதிக்கு (இன்று) நீதிபதி தள்ளி வைத்தார்.
அதன்படி, வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில் இளம் வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது, இந்த வழக்கில் அமலாக்கத்துறை மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதாகவும், அதனால் வழக்கு விசாரணையை சிறிது நேரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்திற்கு தடை கோரி வழக்கு: நாளை விசாரணை!
அதற்கு நீதிபதி அல்லி, “எதற்காக தள்ளி வைக்க வேண்டும்? பதில் மனு தாக்கல் செய்ய சொல்லியும் இன்னும் செய்யவில்லை. பதில் மனுதாக்கல் செய்ய முடியாதவர்கள் எதற்காக வழக்கு தொடர்ந்தீர்கள்?” என கோபத்துடன் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதன்பின்னர், வழக்கை சிறிது நேரம் அவர் தள்ளி வைத்தார். தொடர்ந்து, வழக்கின் விசாரணை நடந்த சிறிது நேரத்திற்கு பிறகு அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, விசாரணை நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு, நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், முதன்முறையாக அமலாக்கத்துறை மீது நீதிபதி கோபமடைந்தது கவனம் ஈர்த்துள்ளது.