திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் (TTD) கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த ரூ. 54 கோடி மதிப்பிலான பட்டுச் சால்வை மோசடி அம்பலமாகியுள்ளது. தூய மல்பெரி பட்டுக்கு பதிலாக ஒப்பந்ததாரர் பாலியஸ்டர் சால்வைகளை வழங்கியது தெரியவந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற திருமலை ஏழுமலையான் கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), கடந்த பத்து ஆண்டுகளாக (2015 முதல் 2025 வரை) நடைபெற்று வந்த ரூ. 54 கோடி மதிப்பிலான பட்டுச் சால்வை மோசடி அம்பலமாகியுள்ளது.
ஒப்பந்த விதிகளில் குறிப்பிடப்பட்டிருந்த தூய மல்பெரி பட்டுக்குப் பதிலாக, ஒப்பந்ததாரர் தொடர்ந்து 100% பாலியஸ்டர் சால்வைகளை வழங்கியுள்ளார் என்பது உள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணை அறிக்கை
தலைவர் பி.ஆர். நாயுடு தலைமையிலான தற்போதைய தேவஸ்தான வாரியம் எழுப்பிய சந்தேகத்தைத் தொடர்ந்து பட்டுகள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. விசாரணையில் இந்த மோசடியின் முழுமையான விவரங்கள் வெளிவந்துள்ளன.
பெரிய நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படுவதற்கும், வேதாசீர்வாசனம் போன்ற கோயில் சடங்குகளில் பயன்படுத்தப்படுவதற்கும் கட்டாயமாக வழங்கப்பட வேண்டிய தூய மல்பெரி பட்டிற்குப் பதிலாக, ஒப்பந்ததாரர் மலிவான பாலியஸ்டர் துணியை வழங்கியுள்ளார்.
"சுமார் ரூ. 350 மதிப்புள்ள ஒரு சால்வைக்கு ரூ. 1,300 என பில் செய்யப்பட்டுள்ளது. மொத்த கொள்முதல் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக இருக்கும். எனவே, ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்,” என்று தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.
மோசடியை உறுதிசெய்த ஆய்வு
சால்வைகளின் மாதிரிகள் மத்திய பட்டு வாரியத்தின் (Central Silk Board - CSB) கீழ் உள்ள ஆய்வகம் உட்பட இரண்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுச் சீரான அறிவியல் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. இரண்டு சோதனைகளும், வழங்கப்பட்ட துணி பாலியஸ்டர் தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இது அப்பட்டமான ஒப்பந்த விதிமீறலாகும்.
உண்மையான பட்டுப் பொருட்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் கட்டாயமான பட்டு ஹோலோகிராம் (hologram) வழங்கப்பட்ட மாதிரிகளில் இல்லை என்பதையும் கண்காணிப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளில், ஒரே ஒரு நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களே தேவஸ்தானத்தின் துணிக் கொள்முதலில் பெரும் பங்கை வழங்கியுள்ளன.
வாரியத்தின் அதிரடி நடவடிக்கை
கண்காணிப்பு அறிக்கையைத் தொடர்ந்து தேவஸ்தான அறங்காவலர் குழு, அந்த நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும் உடனடியாக ரத்து செய்தது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து விரிவான கிரிமினல் விசாரணை நடத்துவதற்காக மாநில ஊழல் தடுப்புப் பிரிவுக்கு (ACB) பரிந்துரை செய்துள்ளது.
சமீபகாலமாக, திருப்பதி லட்டு பிரசாதத்தில் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம், பரக்காணி உண்டியில் பணம் திருட்டு எனப் பல சர்ச்சைகள் உருவாகி, தேவஸ்தான நிர்வாகத்தை ஆட்டிப்படைக்கின்றன. இந்நிலையில், புதிதாக இந்தச் சால்வை மோசடி விவகாரம் வெளிவந்துள்ளது.


