பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
பீகார் அரசு, தலைநகர் பாட்னாவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் கட்டுவதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10.11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. இந்த நிலம் ஆண்டுக்கு ஒரு ரூபாய் என்ற பெயரளவு வாடகையில் 99 வருடக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

பீகாரில் திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) நாடு முழுவதும் பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்களைக் கட்ட நிலம் கோரி வருகிறது. இந்த முயற்சியில் பீகார் அரசு தனது தலைநகரான பாட்னாவில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10.11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.
ஒரு ரூபாய்க்குக் குத்தகை!
பாட்னாவின் முக்கியப் பகுதியான மொகாமா காஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த நிலம், ஆண்டுக்கு வெறும் 1 ரூபாய் வாடகைக்கு 99 வருடக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத் தலைமைச் செயலாளர் பிரத்யா அம்ரித், இது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் பி.ஆர். நாயுடுவுக்கு அனுப்பியுள்ளார்.
வரவேற்பும், நன்றியும்
இந்த நடவடிக்கையை ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர் என். லோகேஷ் ஆகியோர் அன்புடன் வரவேற்றுள்ளனர். கிழக்கிந்தியாவில் உள்ள பக்தர்களுக்குப் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோயிலை அணுகுவதற்கும், கலாசார நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் இது ஒரு சிறப்பான முன்னெடுப்பு என்று அவர்கள் பாராட்டியுள்ளனர்.
இந்த நில ஒதுக்கீட்டுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் பி.ஆர். நாயுடுவும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். இந்த நில ஒதுக்கீடு, "கலாசார ஒருமைப்பாட்டை ஊக்குவிப்பதில் பீகார் அரசின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது" என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், "கோயில் கட்டுமானத்திற்கான அனைத்துத் திட்டமிடல் மற்றும் நடவடிக்கைகளையும் தொடங்குவதற்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானக் குழு விரைவில் பீகார் மாநிலச் சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநருடன் பேச்சுவார்த்தை நடத்தும்" என்றும் தெரிவித்துள்ளார்.

