K.N. Nehru on Rs 44 Lakh Tirupati Donation Controversy: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்னதானத்துக்கு நான் 44 லட்சம் வழங்கியதில் என்ன தவறு உள்ளது? என்று திமுக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
உலகப்புகழ்பெற்ற திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலில் தினமும் பக்தர்களுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் சார்பில் மூன்று வேளையும் இலவசமாக அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதானச் சேவைக்கான ஒருநாள் முழுச் செலவு ரூ.44 லட்சம் ஆகும்.
திருப்பதி கோயிலுக்கு ரூ.44 லட்சம் வழங்கிய கே.என்.நேரு
அன்னதானம் கொடுக்க விரும்புபவர்கள் ரூ.44 லட்சத்தை தேவஸ்தானத்திடம் முன்கூட்டியே கொடுக்க வேண்டும். அந்த நன்கொடையாளர் அன்னதானம் கொடுக்கும் நாளில் அவர் பெயர் கோயிலைச் சுற்றியுள்ள காட்சிப் பலகையில் காண்பிக்கப்படும். அந்த வகையில் திமுகவின் மூத்த தலைவரும், தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு கடந்த 9ம் தேதி திருப்பதி திருமலை கோயிலில் அன்னதானம் வழங்கியுள்ளார்.
ஏழை, எளிய மக்களுக்கு வழங்க வேண்டியது தானே
அன்னதானத்திற்காக கே.என்.நேரு ரூ.44 லட்சம் கொடுத்ததாக அவரது பெயர் திருப்பதி திருமலை அன்னதான அரங்கில் உள்ள டிஜிட்டல் போர்டுகளில் அறிவிக்கப்பட்டு இருந்தது. திராவிட கொள்கையையும், தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையையும் கொண்டிருக்கும் திமுகவின் மூத்த தலைவர் ஏழை, எளிய மக்களுக்கு பணத்தை கொடுக்காமல், உலகின் பணக்கார கோயிலுக்கு வாரி வழங்கியது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பினார்கள்.
நான் கொடுத்தால் என்ன தப்பு?
இந்த நிலையில், கே.என்.நேரு இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் 'திருப்பதி கோயில் அன்னதானத்துக்கு நீங்கள் 44 லட்சம் வழங்கியது குறித்து விமர்சனம் எழுந்துள்ளதே' என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதனால் டென்ஷன் ஆன கே.என்.நேரு, ''ஏன் நான் திருப்பதி கோயிலுக்கு பணம் கொடுக்கக் கூடாதா? விமர்சனம் செய்கிறவர்கள் செய்யட்டும். எங்களை யார் நல்லவன் என்று சொல்வார்கள்'' என்று தெரிவித்தார்.
விஜய்க்கு பதில் சொல்ல முடியாது
இதன்பிறகு 'திமுக நல்லவர் போல் நடிப்பதை நாடே பார்த்து சிரிக்கிறது' என தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்தது குறித்து கே.என்.நேருவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ''அவருக்கு நல்லவராக தெரியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்? நாட்டு மக்கள் அனைவருக்கும் திமுக ஆட்சியும், முதல்வரும் நல்லவராக தெரிகின்றனர். திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதாக திமுக ஆட்சியை பெண்கள் வரவேற்கின்றனர். திமுக நல்லவர் போல் வேஷம் போடவில்லை. நல்லவர்தான். விஜய்க்கெல்லாம் பதில் சொல்ல முடியாது'' என்றார்.
