- Home
- Tamil Nadu News
- திருப்பதி கோயிலுக்கு ரூ.44 லட்சம் அள்ளிக்கொடுத்த கே.என்.நேரு! திராவிட கொள்கை சூப்பர்! கலாய்க்கும் நெட்டிசன்கள்!
திருப்பதி கோயிலுக்கு ரூ.44 லட்சம் அள்ளிக்கொடுத்த கே.என்.நேரு! திராவிட கொள்கை சூப்பர்! கலாய்க்கும் நெட்டிசன்கள்!
தந்தை பெரியாரின் கொள்கையைக் கையில் ஏந்தியுள்ள திமுகவின் மூத்த அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி ஏழுமையான் கோயிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். 'பெரியாரின் கொள்கை வசனத்துக்கு மட்டும்தான் போல' என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில்
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் 2 அல்லது 3 நாள் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் திருப்பதியில் தினமும் பல கோடிகள் வருமானம் கொட்டுகிறது.
மூன்று வேளையும் சுடச்சுட இலவச உணவு
திருப்பதி கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் (TTD) ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னப்பிரசாதம் அறக்கட்டளை மூலம் இலவசமாக மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பசியாறி ஏழுமலையானை மனமுருக தரிசித்து வருகின்றனர். இந்த அன்னதானச் சேவைக்கான ஒருநாள் முழுச் செலவான ரூ.44 லட்சத்தை நன்கொடையாக அளிக்கும் திட்டம் உள்ளது.
ரூ.44 லட்சம் அள்ளிக்கொடுத்த கே.என்.நேரு
காலை ரூ.10 லட்சம், மதியம் ரூ.17 லட்சம் மற்றும் இரவு ரூ.17 லட்சம் என மூன்று வேளைக்கான அன்னதான செலவை தேவஸ்தானத்திடம் முன்கூட்டியே கொடுத்து விட வேண்டும். நன்கொடையாளர் ஒரு குறிப்பிட்ட நாளில் அன்னதானம் வழங்க நன்கொடை (ரூ.44 லட்சம்) அளித்தால், அவர் பெயரும் கோயிலைச் சுற்றியுள்ள காட்சிப் பலகையில் காண்பிக்கப்படும்.
அந்த வகையில் நேற்று (9ம் தேதி) திமுகவின் மூத்த தலைவரும், தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு திருப்பதி திருமலை கோயிலில் அன்னதானம் வழங்கியுள்ளார்.
நெட்டிசன்கள் கிண்டல்
இதற்காக அவர் ரூ.44 லட்சம் கொடுத்த நிலையில், 'இன்றைய நாள் (09.11.2025) நன்கொடை வழங்கியவர் கே.என்.நேரு' என்று நேற்றைய தினம் திருப்பதி திருமலை அன்னதான அரங்கில் உள்ள டிஜிட்டல் போர்டுகளில் அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று கே.என்.நேருவின் பிறந்தநாள் என்பதால் அவர் அன்னதானத்துக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.
திமுக தலைமை தந்தை பெரியாரின் 'கடவுள் மறுப்பு' கொள்கையை இறுகப்பற்றிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவர் உலகப்புகழ் பெற்ற கோயிலுக்கு ரூ.44 லட்சத்தை அள்ளிக்கொடுத்துள்ளது நெட்டிசன்களின் கிண்டலுக்கு வழிவகுத்துள்ளது.
பணக்கார கோயிலுக்கு எதுக்கு நிதி?
''திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் சனாதனத்தை தொடர்ந்து எதிர்க்கின்றனர். இந்து பண்டிகைகளுக்கு கூட வாழ்த்து சொல்வதில்லை. இதைத்தான் திமுகவின் மூத்த தலைவர்கள் சிலரும் பின்பற்றுகின்றனர்.
பெரியாரின் திராவிட கொள்கையை கையில் ஏந்தி திமுக கட்சியை வளர்த்த நிலையில், கே.என்.நேரு உலகின் பணக்கார கோயிலுக்கு ரூ.44 லட்சத்தை அள்ளிக்கொடுத்தது தவறு. இந்த தொகையை கஷ்டப்படும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கியியிருந்தால் உதவியாக இருந்திருக்கும்'' என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுதான் திராவிட மாடலா?
மேலும், ''பெரியாரின் கொள்கை எந்த காலத்துக்கும் பொருந்தும். சமூக நீதிக்கு வழிவகுக்கும் என திமுக தலைவர்கள், நிர்வாகிகள் பக்கம் பக்கமாக வசனம் பேசுகின்றனர். வசனத்துக்கு மட்டும் பெரியார் கொள்கை. ஆனால் நிஜத்தில அவர்கள் அப்படி இல்லை. இப்படி கோயிலுக்கு ரூ.44 லட்சம் அள்ளிக்கொடுப்பது தான் திராவிட மாடலா?'' என ஒரு சிலர் கேள்வி எழுப்பினர்.
முட்டுக் கொடுக்கும் திமுகவினர்
அதெ வேளையில் கே.என்.நேருவின் செயலை நியாயப்படுத்தும் திமுகவினர் சிலர், ''திமுக எந்த மதத்துக்கும் எதிரியில்லை. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவதற்குதான் எதிரி. திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் எவரும் தங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றலாம். இதுதான் திராவிட மாடல்.
ஏன் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினே எந்த அளவுக்கு பக்தியுள்ளவர் என்பது ஊரறிந்த விஷயம். ஆகவே திமுக எந்த மதத்துக்கும் எதிரி கிடையாது. யார் மத விஷயத்திலும் தலையிடாது. மூடநம்பிக்கைகள், மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தும் சக்திகளுக்கு தான் திமுக எதிரி'' என்று தெரிவித்துள்ளனர்.