- Home
- Politics
- நான் எந்த தவறும் செய்யவில்லை.. திமுகவை மிரட்டி பார்ப்பதற்காக ED பொய் சொல்கிறது..! திமிறியடிக்கும் கே.என்.நேரு..!
நான் எந்த தவறும் செய்யவில்லை.. திமுகவை மிரட்டி பார்ப்பதற்காக ED பொய் சொல்கிறது..! திமிறியடிக்கும் கே.என்.நேரு..!
முறைப்படி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று நிருபிப்போம். இது தொடர்பாக அடுத்து அவதூறு வழக்கு தொடலாமா என்பதை பொறுத்திருந்து முடிவு செய்வோம் என அடித்துக் கூறுகிறார் கே.என்.நேரு.

திமுக மூத்த தலைவரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம் நிறுவனம் தொடர்புடைய வங்கி மோசடி குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை ஆராய்ந்தபோது அதிர்ச்சியளிக்கும் ஊழலைக் கண்டறிந்துள்ளனர். தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் இந்தாண்டு பணி நியமனங்கள் செய்யப்பட்டன. இதற்காக அண்ணா பல்கலை சார்பில் எழுத்துத்தேர்வும் நடத்தப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இந்தாண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த பணி நியமனத்தில் மாபெரும் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணி நியமனம் பெற்ற 2,538 பேரில் 150 பேர் தலா ரூ.25 முதல் ரூ.35 லட்சம் லஞ்சம் கொடுத்து அரசு வேலை பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளின் பெயர்கள் அடங்கிய ஆதாரங்களுடன் விசாரணை நடத்த கோரி 232 பக்க கடிதம் ஒன்றை தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை அனுப்பி உள்ளது.
அந்த கடிதத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் . ‘‘நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2,538 காலியிடங்களுக்கு, தேர்வு அறிவிக்கப்பட்டது. 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்து உள்ளது. அரசியல்வாதிகள் ஒரு காலியிடத்திற்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை 150 பேரிடம் லஞ்சம் வசூலித்து இருக்கின்றனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்களிடமும், தேர்வுகளை நடத்திய அண்ணா பல்கலை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும்’’ என அந்தக் கடிதத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் கே.என்.நேரு, ‘‘நான் எந்த தப்பும் செய்யவில்லை. அமலாக்கத்துறையின் புகார் திமுகவை மிரட்டிப் பார்க்கும் வேலையாக இருக்கலாம். முறைப்படி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று நிருபிப்போம். இது தொடர்பாக அடுத்து அவதூறு வழக்கு தொடலாமா என்பதை பொறுத்திருந்து முடிவு செய்வோம். நாங்கள் விசாரணையில் குற்றமற்றவர்கள் என்று நிரூபித்து வெளியில் வருவோம்'’ என அடித்துக் கூறுகிறார் கே.என்.நேரு.