திருமலை ஏழுமலையான் கோயில் காணிக்கைத் திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சி.வி. ரவிக்குமார், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பாவத்திற்குப் பிராயச்சித்தமாக சொத்துக்களைத் தானம் செய்ததாகவும் கூறியுள்ளார்

திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் காணிக்கைத் தொகையில் இருந்து பொருட்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சி.வி. ரவிக்குமார், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாகத் தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.

சனிக்கிழமை அன்று அவர் வெளியிட்ட சிறிய வீடியோவில், தான் செய்த குற்றத்தை ஏறக்குறைய ஒப்புக்கொண்டதோடு, இந்த வழக்கின் அடிப்படையில் சிலர் தன்னைப் பணம் கேட்டு மிரட்டியதாகவும் (Blackmail) குற்றம் சாட்டியுள்ளார்.

"செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம்"

காவி நிற அங்கவஸ்திரம் பின்னணியில் இருக்க, மன உளைச்சலுடன் காணப்பட்ட ரவிக்குமார், 2.25 நிமிட வீடியோவில் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2023 ஏப்ரல் 29 அன்று, பரக்காமணி (காணிக்கை எண்ணும் இடம்) பகுதியில் நான் ஒரு பாவத்தைச் செய்தேன். அந்தச் செயலின் குற்ற உணர்வைத் தாங்க முடியாமல், நானும் எனது குடும்பத்தினரும் மனசாட்சியின் அடிப்படையில் எங்களது சொத்துக்களில் 90% ஐ வெங்கடேஸ்வர சுவாமிக்கு தானமாக வழங்க முடிவு செய்தோம். இந்தத் தானம், நான் செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தமாக மட்டுமே செய்யப்பட்டது.” என்று அவர் கூறியுள்ளார்.

“இந்த வழக்கு வெளியானவுடன், நான் அழுத்தம் காரணமாகவோ அல்லது லஞ்சம் கொடுத்ததன் காரணமாகவோ சொத்துக்களைத் தானம் செய்ததாகப் பிரச்சாரம் பரப்பப்பட்டது. ஆனால், எனது சொந்தச் சொத்துக்களை TTD-க்கு தானம் செய்ய நான் ஏன் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும்?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்

காணிக்கையை மறைப்பதற்காக நான் ஆசனவாயில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பி, பொது விவாதங்களையும் நடத்தினர். இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிரூபிக்க, நீதிமன்றம் உத்தரவிடும் எந்தவொரு மருத்துவப் பரிசோதனைக்கும் நான் எப்போது வேண்டுமானாலும் தயாராக இருக்கிறேன்.

பரக்காமணியில் நான் செய்த தவறுக்கு நான் மட்டுமே பொறுப்பு. எனது தானம், வருத்தத்தின் வெளிப்பாடு மற்றும் பிராயச்சித்தம் மட்டுமே, வேறு எதுவும் இல்லை என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

தேவஸ்தான நிர்வாகத்தின் சந்தேகம்

இந்த வீடியோ வெளியான நேரம் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி. பானு பிரகாஷ் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

"கையும் களவுமாகப் பிடிபட்டு, இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒரு வார்த்தை கூடப் பேசாத குற்றம் சாட்டப்பட்டவர், இப்போது வீடியோ வெளியிடுவது பல கேள்விகளை எழுப்புகிறது. வழக்கை மூடிமறைக்க முயன்றவர்களால் அவர் தூண்டப்படுகிறாரோ என்று நான் சந்தேகிக்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

பரக்காமணி திருட்டு வழக்கு

திருமலை பெரிய ஜீயர் மடத்தில் எழுத்தராகப் பணிபுரிந்த சி.வி. ரவிக்குமார், 2023 ஏப்ரல் 29 அன்று சுமார் 900 டாலர் (சுமார் ரூ.72,000) திருட முயன்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு, ரவிக்குமாரும் அவரது குடும்பத்தினரும் தங்கள் ஏழு சொத்துக்களை, தேவஸ்தானத்துக்குத் தானமாக வழங்கினர். இந்தச் சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.14 கோடி எனவும் கூறப்பட்டது.

2023 செப்டம்பர் 9-ல், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிக்கும் ரவிக்குமாருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதன் பேரில், ரவிக்குமாரை விடுதலை செய்து வழக்கை முடித்து வைத்தது திருப்பதி லோக் அதாலத் நீதிமன்றம்.

இதனை எதிர்த்துத் திருப்பதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபரில், இந்த வழக்கை சி.ஐடி. மற்றும் மாநில ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கில் புகார்தாரராக இருந்த ரயில்வே காவல் ஆய்வாளர் டி. சதீஷ்குமார், சி.ஐ.டி. விசாரணையில் ஆஜராவதற்காக ரயிலில் சென்றுகொண்டிருந்தபோது, நவம்பர் 10 அன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது கொலை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மறுபுறம், விசாரணையை மேற்கொண்ட இரண்டு அமைப்புகளும் தங்களது மறுவிசாரணை அறிக்கைகளை டிசம்பர் 2 அன்று மூடி முத்திரையிடப்பட்ட உறைகளில் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தன.