2 நாள் பயணமாக இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி.. உற்றுநோக்கும் மேற்கத்திய நாடுகள்..
பிரதமர் நரேந்திர மோடி இன்று 2 நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பிறகு பிரதமர் மோடி ரஷ்யா செல்வது இது முதன்முறையாகும்.
22வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டை நடத்துவதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இன்று, 2 நாள் பயணமாக மாஸ்கோவிற்கு செல்கிறார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பிறகு பிரதமர் மோடி ரஷ்யா செல்வது இது முதன்முறையாகும்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் ரஷ்யா சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடிக்கும் விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான வருடாந்திர உச்சிமாநாடு இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
போலி கால் சென்டர் நடத்தி கோடி கோடியாக சுருட்டிய மோசடி கும்பல்! புட்டு புட்டு வைக்கும் கருப்பு டைரி!
மோடியும் புடினும் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளின் முழு வரம்பையும் மதிப்பாய்வு செய்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சந்திப்பின் போது பரஸ்பர ஆர்வமுள்ள சமகால பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது ரஷ்ய பயணத்தின் போது புடின் உடனான தனிப்பட்ட சந்திப்பு தவிர பல்வேறு நிக்ழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். பிரதிநிதிகள் அளவிலான பேச்சுக்கள், பிரதமர் மற்றும் அவரது பிரதிநிதிகளுக்கு புடின் வழங்கும் மதிய உணவு மற்றும் ரோசாட்டம் பெவிலியன் வளாகத்தில் உள்ள கண்காட்சி மையத்திற்கு வருகை ஆகியவை அடங்கும். இந்திய புலம்பெயர்ந்தோர் கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்யாவின் அரசு நடத்தும் VGTRK தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், மாஸ்கோவில் மோடியின் நிகழ்ச்சி "விரிவானதாக" இருக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் "வெளிப்படையாக, நிகழ்ச்சி நிரல் விரிவானதாக இருக்கும், இது ஒரு அதிகாரப்பூர்வ பயணமாகவும் இருக்கும். தலைவர்கள் முறைசாரா முறையிலும் பேசுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்… ரஷ்ய-இந்திய உறவுகளுக்கு மிகவும் முக்கியமான ஒரு மிக முக்கியமான மற்றும் முழு அளவிலான பயணத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று பெஸ்கோவ் கூறினார். .
பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தை மேற்கத்திய நாடுகள் உன்னிப்பாகவும் பொறாமையுடனும் கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர் "அவர்கள் பொறாமைப்படுகிறார்கள் - அதாவது அவர்கள் அதை உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள். அவர்களின் நெருக்கமான கண்காணிப்பு என்பது அவர்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.
இதனிடையே வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பிரதமர் மோடியின் ரஷ்யா பயணம் ரஷ்யா உடனான வர்த்தகம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்த" ஒரு சிறந்த வாய்ப்பு என்று நேற்று பேசினார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர் “ இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சில பிரச்சினைகளுக்கு தீர்வு தேவை. வியாபார ஏற்றத்தாழ்வு போன்ற சிக்கல்கள் உள்ளன... எனவே, தலைமைத்துவ மட்டத்தில், பிரதமர் மோடியும் அதிபர் புடினும் இதுகுறித்து நேரடியாகப் பேச இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். ரஷ்யா - இந்தியா உறவை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்று பார்ப்போம், ” என்று ஜெய்சங்கர் கூறினார்.
பிரதமர் மோடி கடைசியாக 2019 இல், ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் நடந்த பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டார். 2022ல் ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் மோடியின் முதல் மாஸ்கோ பயணம் இதுவாகும். இருப்பினும், உலகப் பொருளாதாரத்தை பாதித்துள்ள போரை முடிவுக்கு கொண்டு வருவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மோடி புடின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பல தொலைபேசி உரையாடல்களை நடத்தினார். மாஸ்கோ பயணத்திற்குப் பிறகு, மோடி ஜூலை 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்கள் ஆஸ்திரியா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.