போலி கால் சென்டர் நடத்தி கோடி கோடியாக சுருட்டிய மோசடி கும்பல்! புட்டு புட்டு வைக்கும் கருப்பு டைரி!
போலீஸ் விசாரணைக்குப் பிறகு, ஆஷிஷ் பயன்படுத்திய கருப்பு டைரி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த டைரியில் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டியது குறித்த விவரங்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் நடந்த ஒவ்வொரு நிதிப் பரிவர்த்தனையும் விவரமாகக் குறித்து வைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் தனிநபர் தரவுகளை வெறும் 2,500 ரூபாய்க்கு வாங்கி, நொய்டாவில் போலி கால் சென்டர் தொடங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்த 11 பேர் கொண்ட கும்பலை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த மோசடி கும்பல் போலியான இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் கடன்கள் மூலம் நூற்றுக்கணக்கான நபர்களை ஏமாற்றி கோடி கோடியாக பணம் பறித்துள்ளனர். இந்தத் தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்ட 11 பேரில் 9 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடிக்காரர்களில் இரண்டு பேர் காப்பீட்டு நிறுவனத்தில் முகவர்களாக வேலை பார்த்தவர்கள்.
போலி கால் சென்டர், நொய்டாவின் செக்டர் 51 சந்தையில் ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடியில் ஒரு வருடத்திற்கும் மேலாக இயங்கி வந்தது. இந்தக் கும்பல் டெல்லிக்கு வெளியே உள்ளவர்களிடம் போலியான கடன் மற்றும் இன்சூரன்ஸ் பாலிசி திட்டங்களில் சேர வைத்து ஏமாற்றியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் அதிக வருமானம் தருவதாகக் கூறியதை நம்பி பணத்தை பறிகொடுத்துவிட்டு நிற்கின்றனர். இந்த மோசடியின் மூளையாக இருந்த ஆஷிஷ் மற்றும் ஜிதேந்திரா ஆகியோர் ஒன்பது பெண்களை கால் சென்டர் நிர்வாகிகளாக பணியமர்த்தியுள்ளனர்.
போலி கால் சென்டர் நடத்துவதற்காக போலி ஆதார் கார்டு எண்கள் மூலம் சிம்கார்டுகளையும் வாங்கியுள்ளனர். இந்த சிம் கார்டுகள் அவர்களின் அடையாளங்களை மறைக்க பயன்படுத்தப்பட்டன. எவ்வளவு அதிகமான நபர்களை தங்களின் கடன் அல்லது இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர வைக்கிறார்களோ அதற்கு ஏற்ப கமிஷன் பணம் கிடைக்கும் என்று சொல்லி மோசடி செய்துள்ளனர்.
மோசடியில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வாங்கிய பணம் கர்நாடகாவில் உள்ள அரவிந்த் என்பவரின் பஞ்சாப் நேஷனல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. இதற்காக அந்த நபருக்கு மாதம் ரூ.10,00 வாடகையும் கொடுத்துள்ளனர். அந்தக் கணக்கில் உள்ள பணத்தை நொய்டாவில் இருந்தபடியே ஆஷிஷ், ஜிதேந்திரா இருவரும் டெபிட் கார்டு மூலம் எடுத்துக்கொள்வார்கள்.
போலீஸ் விசாரணைக்குப் பிறகு, ஆஷிஷ் பயன்படுத்திய கருப்பு டைரி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த டைரியில் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டியது குறித்த விவரங்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் நடந்த ஒவ்வொரு நிதிப் பரிவர்த்தனையும் விவரமாகக் குறித்து வைக்கப்பட்டுள்ளது.
"2019 ஆம் ஆண்டு எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஆஷிஷும் ஜிதேந்திராவும் இந்த மோசடி செயலை தொடங்கினர். இந்தியா மார்ட்டில் இருந்து சுமார் 10,000 பேரின் தனிப்பட்ட தரவுகளை ரூ.2,500க்கு வாங்கி, இந்தியா முழுவதும் உள்ளவர்களுக்கு லோன் மற்றும் இன்சூரன்ஸ் வழங்குவதாக கூறி ஏமாற்றியுள்ளனர்" என்று விசாரணை மேற்கொண்ட போலீசார் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளிகளான இரண்டு பேரின் பெயர் அமித் என்ற ஆஷிஷ் குமார் மற்றும் அபிஷேக் என்ற ஜிதேந்திர வர்மா என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இவர்களைத் தவிர, சினேகா என்கிற நிஷா, திவ்யா என்கிற நிஷா, லவ்லி யாதவ் என்கிற ஸ்வேதா, பூனம் என்கிற பூஜா, ஆர்த்தி குமாரி என்கிற அனன்யா, காஜல் குமாரி என்கிற சுர்தி, சரிதா என்கிற சுமன், பபிதா பட்டேல் என்கிற மஹி, கரிமா சவுகான் என்கிற சோனியா என 9 பெண்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதிதாக இயற்றப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா விதிகளின் கீழ் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.