உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ஐ பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.
 

PM Modi to inaugurate the Global Maritime India Summit 2023 tomorrow smp

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ன் மூன்றாவது பகுதியைப் பிரதமர் மோடி நாளை (அக்டோபர் 17ஆம் தேதி) காலை 10:30 மணிக்குக் காணொலி காட்சி மூலம்  தொடங்கி வைக்கிறார். மும்பையில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் அக்டோபர் 17 முதல் 19 வரை இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது, இந்திய கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கு நீண்டகாலத் திட்டமான 'அமிர்தகாலத் தொலைநோக்கு-2047'-ஐ பிரதமர் மோடி வெளியிடவுள்ளார். துறைமுக வசதிகளை மேம்படுத்துதல், நீடித்த நடைமுறைகளை ஊக்குவித்தல், சர்வதேச ஒத்துழைப்பை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட உத்திசார்ந்த முன்முயற்சிகளை இந்தத் திட்டம் சுட்டிக்காட்டுகிறது.

இந்த எதிர்காலத் திட்டத்திற்கு ஏற்ப, இந்தியக் கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கான 'அமிர்தகாலத் தொலைநோக்கு 2047' உடன் ரூ.23,000 கோடிக்கும் அதிக மதிப்புடைய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

மேலும், குஜராத்தில் உள்ள தீன்தயாள் துறைமுக ஆணையத்தில் ரூ.4,500 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்படவுள்ள துனா தெக்ரா அனைத்துப் பருவநிலைக்கும் உகந்த ஆழமான முனையத்திற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த அதிநவீன பசுமை முனையம் அரசு - தனியார் நிறுவனக் கூட்டாண்மை முறையில் உருவாக்கப்படும். சர்வதேச வர்த்தக மையமாக உருவெடுக்கும் இந்த முனையம்,  இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம்  வழியாக  இந்திய வர்த்தகத்திற்கான நுழைவாயிலாக செயல்படும்.

கடல்சார் துறையில் உலகளாவிய மற்றும் தேசியக் கூட்டாண்மைக்காக ரூ. 7 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்புடைய 300க்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் பிரதமர் மோடி இந்தத் திட்டத்தின்போது அர்ப்பணிப்பார்.

இந்த உச்சிமாநாடு, இந்தியாவின் மிகப்பெரிய கடல்சார் நிகழ்வாகும். இதில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா (மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் பிம்ஸ்டெக் பிராந்தியம் உட்பட) நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகெங்கிலும் உள்ள அமைச்சர்கள் பங்கேற்பார்கள். இந்த மாநாட்டில்  உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகள், வணிகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், அதிகாரிகள் மற்றும் பிற பங்குதாரர்கள் கலந்து கொள்வார்கள். மேலும், இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் இதரப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

கே.சி.ஆர் மதுபான கமிஷனில் மும்மரமாக உள்ளார்: அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டு!

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், எதிர்காலத் துறைமுகங்கள் உட்பட, கடல்சார் துறையின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதில், கரியமிலவாயு குறைத்தல்;  கடலோரக் கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர் போக்குவரத்து;  கப்பல் கட்டுதல்;  பழுதுபார்த்தல் மற்றும் மறுசுழற்சி;  நிதி, காப்பீடு மற்றும் நடுவர் மன்றம்; கடல்சார் குழுமங்கள்; கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம்; கடல்சார் பாதுகாப்பு; மற்றும் கடல்சார் சுற்றுலா போன்றவை அடங்கும்.

நாட்டின் கடல்சார் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறந்த தளத்தையும் இந்த உச்சிமாநாடு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கடல்சார் இந்தியா உச்சிமாநாடு 2016ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்றது. இரண்டாவது கடல்சார் உச்சி மாநாடு 2021ஆம் ஆண்டில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios