கே.சி.ஆர் மதுபான கமிஷனில் மும்மரமாக உள்ளார்: அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டு!
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்திற்கு மதுபான கமிஷன் சம்பாதிப்பதில் மும்முரமாக இருப்பதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
தெலங்கானா மாநிலத் தேர்தல் நெருங்கும் நிலையில், அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஐந்து மாநிலத் தேர்தலில் தெலங்கானாவும் ஒன்று. பாஜகவுக்கு எதிராக ஓரணியில் எதிர்க்கட்சிகள் திரண்டுள்ளதற்கு இடையே, 2024 மக்களவை தேர்தலுக்கு முன் நடைபெறும் தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேசியத் தலைவர், மத்திய அமைச்சர்கள் என பலரும் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.
அந்த வகையில், தெலங்கானாவின் ஹுசூர்நகரில் தேர்தல் பணிகள் குறித்து மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 2014ஆம் ஆண்டில் தெலங்கானா மாநிலம் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பு 1997ஆம் ஆண்டில் இருந்தே தெலங்கானாவுக்கு பாஜக ஆதரவாக இருந்தது என்றார்.
பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சிக்கும், 9 ஆண்டுகால கே.சி.ஆர் ஆட்சிக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்ற அவர், இரண்டு கட்சிகளும் பொய்யான வாக்குறுதிகள் அளித்ததுடன், தங்கள் குடும்பங்களுக்கு முதலில் முன்னுரிமை அளித்தனர் என்றார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “கே.சி.ஆர் தனது குடும்பத்திற்கு மதுபான கமிஷன் சம்பாதிப்பதில் மும்முரமாக இருந்து வருகிறார். 9 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார். எனவே அவரது சமீபத்திய தேர்தல் அறிக்கை முந்தைய அறிக்கையும் கணிசமாக ஒத்துப் போகிறது.” என்றார்.
பெண்களுக்கு 10 கிராம் தங்கம்: தெலங்கானா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!
மேலும், இளைஞர்களுக்கு மகத்தான வாய்ப்புகளுடன் வளர்ந்த மாநிலம் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையையும் அப்போது அவர் மீண்டும் வலியுறுத்தினார். டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கேசிஆரின் மகளும், அம்மாநில எம்.எல்.சியுமான கவிதா அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள நிலையில், தெலங்கானா மாநிலத் தேர்தலில் இந்த விவகாரம் முக்கிய விமர்சனமாக எதிர்க்கட்சிகளால் முன் வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.