Asianet News TamilAsianet News Tamil

பெண்களுக்கு 10 கிராம் தங்கம்: தெலங்கானா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

பெண்களுக்கு 10 கிராம் தங்க வழங்கும் திட்டம் தெலங்கானா மாநில தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Free gold likely to be in congress telangana manifesto smp
Author
First Published Oct 16, 2023, 4:15 PM IST

மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 2014, ஜூன் 2ஆம் தேதி புதிய மாநிலமாக தெலங்கானா உதயமானது. அதே ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, புதிய மாநிலமாக உருவான தெலங்கானாவின் முதல் முதல்வராக சந்திரசேகர் ராவ் பொறுப்பேற்றார். அதற்கு அடுத்து 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சந்திரசேகர் ராவ் முதல்வரானார்.

தெலங்கானா மாநிலத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. எனவே, வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகளை அக்கட்சிகள் வழங்கி வருகின்றன.

அந்த வகையில், பெண்களுக்கு 10 கிராம் தங்க வழங்கும் திட்டம் தெலங்கானா மாநில தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணத்தின் போது தகுதியான பெண்களுக்கு பத்து கிராம் தங்கம், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் மாணவர்களுக்கு இலவச இண்டர்னெட் வசதி உள்ளிட்ட பெண்களையும், இளைஞர்களையும் கவரும் வாக்குறுதிகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து தெலங்கானா காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவர் டி.ஸ்ரீதர் பாபு கூறுகையில், கட்சியின் மகாலட்சுமி உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் ரொக்கத்துடன் சேர்த்து கூடுதலாக தங்கம் வழங்கப்படும் என்றார். திருமணத்தின் போது பெண்களுக்கு 10 கிராம் தங்கம் வழங்கப்படும். இதன் மதிப்பு ரூ.50,000 முதல் 55,000 வரை இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி அரசாங்கம், கல்யாண லக்ஷ்மி மற்றும் ஷாதி முபாரக் திட்டங்களின் கீழ், 18 வயது பூர்த்தியடைந்த தெலங்கானாவில் வசிக்கும், பெற்றோரின் வருமானம் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணத்தின் போது ரூ.1,00,116 ஒருமுறை நிதியுதவி வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.

மேலும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு இலவச இண்டர்னெட் வழங்கவும் கட்சி திட்டமிட்டுள்ளதாக தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். “நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இணைய சேவை வழங்குனர்களுடன் பேசி அதற்கான வழிமுறைகளை வகுப்போம்.” என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பிஆர்எஸ் செய்தித் தொடர்பாளர் ஸ்ரவன் தசோஜு கூறுகையில், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறது. தேர்தல் அறிக்கையில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்; ஆனால், அதனை செயல்படுத்துவதே முக்கியம் என்றார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: தீர்ப்பு தள்ளி வைப்பு!

“சுதந்திர இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சியும் நினைத்துப் பார்க்காத புதுமையான கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஏழைகளுக்காக கொண்டு வந்து செயல்படுத்துவதில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ்தான் முதன்மையானவர்.” என்று ஸ்ரவன் தசோஜு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தெலங்கானா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் ஆறு உத்தரவாதங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எல்பிஜி சிலிண்டர் ரூ.400க்கு வழங்கப்படும், சமூக ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பிஆர்எஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கே.சந்திரசேகர் ராவ் நேற்று வெளியிட்டார்.

மேலும், மகாலட்சுமி உத்தரவாத திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி, ரூ.500 க்கு எல்பிஜி சிலிண்டர், மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios