"உங்கள் வேலையை செய்ய எதிர்க்கட்சிகள் உங்களுக்கு உதவும்.." ஓம் பிர்லாவுக்கு ராகுல்காந்தி வாழ்த்து..
மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவரை வாழ்த்திப் பேசினார்.
மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவரை வாழ்த்திப் பேசினார்.
ராகுல் காந்தி பேசுகையில், ''சபாநாயகராக நீங்கள் இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்கு இந்தியா கூட்டனி சார்பில் நான் உங்களை வாழ்த்துகிறேன். இந்திய மக்களின் குரலை இந்த சபை பிரதிபலிக்கிறது. நீங்கள் அதற்கு ஆதாரமாக இருக்கிறீர்கள். அரசுக்கு அரசியல் அதிகாரம் இருக்கிறது. எதிர்கட்சிகள் மக்களின் குரலை பிரதிபலிக்கிறது. இந்த முறை எதிர்க்கட்சிகள் மக்களின் குரலை அதிகமாக பிரதிபலிக்க உள்ளனர். உங்களது வேலைக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கும்.
ஒத்துழைப்பு நம்பிக்கை அடிப்படையில் இருக்கும். எனவே மக்களின் குரலை வெளிப்படுத்த நீங்கள் எதிர்க்கட்சிகளை பேசி அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன். அரசியலமைப்பு சட்டத்தை எதிர்கட்சிகள் உயர்த்தி பிடிக்க வேண்டும் என்பதற்காக அதிக பிரதிநித்துவம் கொடுத்துள்ளனர், நம்புகின்றனர். எனவே மக்களின் குரலை பிரதிபலிக்கும் வகையில் சபாநாயகர் என்பவர் நடுநிலையாக செயல்பட வேண்டும். நீங்களும் அவ்வாறு செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்.
சபை சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நம்பிக்கையின் அடிப்படையில் ஒத்துழைப்பது மிகவும் முக்கியம். இந்த அவையில் எதிர்க்கட்சிகளின் குரல் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவது மிகவும் முக்கியம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக 18வது மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியின் வேட்பாளரான ஓம் பிர்லாவும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிட்டனர். இதில் ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அவரை பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு ஆகியோர் அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமரவைத்து வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.