அருகில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை வைத்துக் கொண்டே மத்திய அரசை விளாசிய மம்தா!!
பாலசோர் (ஒடிசா): ஒடிசா ரயில்கள் விபத்து தொடர்பான உண்மை வெளிவர வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் நேற்றிரவு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி, இதுவரை சுமார் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயமைடந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் நடைபெற்ற மீட்பு பணிகள் நிறைவடைந்து, தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டை உலுக்கிய இந்த ரயில்கள் விபத்து தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, ஒடிசா மாநிலம் சென்று சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்யவுள்ளார். அத்துடன், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லவுள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஒடிசா ரயில்கள் விபத்து தொடர்பான உண்மை வெளிவர வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மேற்குவங்க முதல்வரும், இரண்டு முறை மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தவருமான மம்தா பானர்ஜி, ஹெலிகாப்டர் மூலம் ஒடிசா மாநிலம் சென்றார். விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்த அவர், விபத்து குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அங்கு ஏற்கனவே இருந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடமும், அவர் விவரங்களை கேட்டறிந்தார்.
கவாச் என்றால் என்ன? ஒடிசா ரயில் விபத்தை தடுத்திருக்க முடியுமா?
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் விபத்து இது, இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இந்த விபத்துக்கு பின்னால் ஏதாவது காரணம் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், சம்பவம் தொடர்பான உண்மை வெளிவர வேண்டும் என்றார்.
மேலும், விபத்து தடுப்பு கருவிகள் முறையாக பொருத்தப்படாததால்தான் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கிறது என்ற அவர், ஏன் அந்த பாதுகாப்பு அமைப்புகள் செயல்படவில்லை எனவும் கேள்வி எழுப்பினார். அத்துடன், ரயில்வே துறையில் ஒருங்கிணைப்பு இல்லை எனவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை பக்கத்தில் வைத்துக் கொண்டு மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்தார். தாம் ஏற்கனவே ரயில்வே அமைச்சராக இருந்ததை நினைவுகூர்ந்த மம்தா பானர்ஜி, இதுபோன்ற சம்பவங்கள் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, “ரயில் விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மாநில அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மேற்குவங்க அரசு நேற்று 40 ஆம்புலன்ஸ்களை அனுப்பியுள்ளது. இன்று 70 ஆம்புலன்ஸ்களையும், 40 மருத்துவர்களையும் அனுப்பி உள்ளோம். மீட்பு பணிகளில் மட்டுமே தற்போது வரை நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். மீட்பு பணிகள் முடியும் வரை ரயில்வே மற்றும் ஒடிசா மாநில அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்.” என்றார். இதந்தொடர்ச்சியாக, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து மம்தா பானர்ஜி ஆறுதல் கூறவுள்ளார்.
ஒடிசா ரயில் விபத்து: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்!
முன்னதாக, ஒடிசா, பாலசோரில் விபத்து நடைபெற்ற இடத்தில் நேரில் ஆய்வு செய்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 3 ரயில்கள் விபத்து தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைத்துள்ளதாகவும், ரயில் விபத்து குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதேசமயம், ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.