Asianet News TamilAsianet News Tamil

ஒடிசா ரயில் விபத்து: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்!

டெல்லி: ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில்கள் விபத்தையடுத்து, மத்திய ரயில்வே துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Odisha triple train mishap Opposition demanded railway minister Ashwini Vaishnaw resignation
Author
First Published Jun 3, 2023, 2:31 PM IST

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம் பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே  சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. அந்த சமயத்தில், அப்பகுதியை வந்தடைந்த கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயிலும் விபத்துக்குள்ளானது.

நாட்டை உலுக்கியுள்ள இந்த மூன்று ரயில்கள் விபத்தில் இதுவரை சுமார் 233 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயமைடந்துள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகும், மேலும் பலர் ரயில் பெட்டிகளின் அடியில் சிக்கிக் கொண்டிருப்பதாலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Odisha triple train mishap Opposition demanded railway minister Ashwini Vaishnaw resignation

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலானது அதே தண்டவாளத்தில் இருந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானதாகவும், தடம்புரண்ட பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஹவுரா அதிவிரைவு ரயில் அதன் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயில் மாலை 6.55 மணியளவில் தடம் புரண்டதாகவும், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 7 மணியளவில் தடம்புரண்டு அருகே தடம்புரண்டு கிடந்த ஹவுரா அதிவிரைவு ரயில் மீது முதலிலும், பின்னர் சரக்கு ரயில் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு, முழுமையான தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விபத்து தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், சம்பவ இடத்துக்கு பிரதமர் மோடி நேரில் செல்லவுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

முன்னதாக, ஒடிசா, பாலசோரில் விபத்து நடைபெற்ற இடத்தில் நேரில் ஆய்வு செய்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 3 ரயில்கள் விபத்து தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைத்துள்ளதாகவும், ரயில் விபத்து குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், ஒடிசா மாநில ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. “சிக்னல் கோளாறு காரணமாக 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது என்பது நம்ப முடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவை பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளன. விபத்து தொடர்பான அத்தகைய தீவிரமான கேள்விகள் பதிலளிக்க வேண்டியவை.” என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநில ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பெரும் விபத்து ஏற்படும் போது அதற்கு பொறுப்பேற்று அமைச்சர்கள் ராஜினாமா செய்வதென்பது வழக்கமான ஒன்றுதான் எனவும் அக்கட்சி கருத்து தெரிவித்துள்ளது. 

அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் கூறுகையில், ‘இதற்கு முன்பு இதுபோன்ற விபத்துகள் நடக்கும் போது, ரயில்வே அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். ஆனால் இப்போது யாரும் இதுபற்றி பேசக்கூட தயாராக இல்லை” என்றார்.

சிபிஐ தலைவர் பினோய் விஸ்வம் கூறுகையில், “அரசின் ஒரே கவனம் சொகுசு ரயில்களில் மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் சாமானியர்களுக்கான ரயில்கள் மற்றும் தடங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. அரசு சொகுசு ரயில்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ரயில்களும், சாமானியர்களின் பாதைகளும் புறக்கணிக்கப்படுகின்றன. ஒடிசா ரயில் மரணங்களே அதன் விளைவு. ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios