Asianet News TamilAsianet News Tamil

கவாச் என்றால் என்ன? ஒடிசா ரயில் விபத்தை தடுத்திருக்க முடியுமா?

சென்னை: ஒடிசா ரயில்கள் விபத்தையடுத்து இந்திய ரயில்வேயின் ‘கவாச்’ என்ற தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.

What is Kavach? question raised after Odisha Coromandel Express train accident
Author
First Published Jun 3, 2023, 2:17 PM IST

ஒடிசா மாநிலம்  பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், மேற்குவங்க மாநிலம் ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் நேற்றிரவு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி, இதுவரை சுமார் 261 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயமைடந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

ரயில்கள் விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இந்திய ரயில்வேயின் ‘கவாச்’ என்று அழைக்கப்படும் தானியங்கி பாதுகாப்பு அமைப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. கவாச் அமைப்பு குறித்து அஷ்வினி வைஷ்ணவ் விவரிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிரும் பலரும், கவாச் அமைப்பு என்ன ஆனது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“ரயில்வே அமைச்சரும், நரேந்திர மோடி அரசாங்கமும் முன்வைக்கும் பாதுகாப்பு அமைப்பு 'கவாச்' என்ன ஆனது? தற்போதைய அரசாங்கத்தின் மற்ற விளம்பரங்களை போலவே இதுவும் ஒரு விளம்பர ஸ்டண்ட். ரயில் விபத்துகளின் வரலாற்றைக் கொண்ட இத்துறையில் அது செயல்படவில்லை என்றால், வேறு எங்கு இதை நிறுவ அரசு திட்டமிட்டது?” என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

கவாச் என்றால் என்ன?
விபத்தில்லா ரயில் பயணம் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக 2022 மத்திய பட்ஜெட்டில் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் கவாச் எனப்படும் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கவாச் எனப்படும் உள்நாட்டு தானியங்கி ரயில் பாதுகாப்பு (ATP - Automatic Train Protection) அமைப்பை மேம்படுத்துவதன் மூலம், இந்தியாவில் ரயில் சேவைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையை ரயில்வே அமைச்சகம் அறிவித்தது. கவாச் தொழில்நுட்பம், இந்திய ரயில்வேக்கான தேசிய தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கவாச் தொழில்நுட்பம் என்பது தானியங்கி ரயில் மோதல் பாதுகாப்பு அமைப்பாகும். ரிசர்ச் டிசைன்ஸ் மற்றும் ஸ்டாண்டர்ட்ஸ் ஆர்கனைசேஷன் (RDSO) மூலம் மூன்று இந்திய நிறுவனங்களுடன் இணைந்து கவாச் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. கவாச் அமைப்பின் முக்கிய அம்சங்களாக, ஆபத்து நேரங்களில் சிக்னல்களை தாண்டும்போது, ரயில் ஓட்டுநர்களுக்கு உதவும் வகையிலும், ரயில் ஓட்டுநர்கள் செயல்பட தவறும் பட்சத்தில் தானாகவே பிரேக் போடும் வகையிலும், அடர்ந்த மூடுபனி போன்ற பாதகமான வானிலையின் போது உதவும் வகையிலும் கவாச் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் போது தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த அமைப்பு ரயில்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துகளை தடுக்கும். அத்துடன், ரயிலின் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைவிட வேகமாகவும் இயங்க அனுமதிக்காது.

பனிமூட்டமான சூழ்நிலைகளிலும், அதிக வேகத்திலும் மேம்பட்ட பார்வைக்காக கேபினில் லைன்-சைட் சிக்னல் காட்சியை வழங்குதல், இயக்கத்தை தொடர்ந்து கட்டுப்படுத்துதல், லெவல் கிராசிங்குகளில் தானியங்கி விசில், அவசரகால சூழ்நிலைகளில் ரயில்களைக் கட்டுப்படுத்த SOS அம்சம், மோதலைத் தவிர்க்க ரயில் ஓட்டுநர்களிடையே நேரடி தொடர்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட அம்சங்களும் இந்த கவாச் அமைப்பில் அடங்கும்.

வெற்றிகரமான சோதனை
தென் மத்திய ரயில்வேயின் லிங்கம்பள்ளி-விகாராபாத்-வாடி மற்றும் விகாராபாத்-பிதார் பிரிவுகளில் 250 கிலோமீட்டர் தூரம் வரை கவாச் தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. தெலங்கானா மாநிலத்தில் இந்த அமைப்பு சோதனை செய்யப்பட்டபோது, கவாச் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட  இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் விடப்பட்டது. அந்த சமயத்தில் ஒரு ரயில் இன்ஜினில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும், மற்றொன்றில் ரயில்வே வாரிய தலைவர் வி.கே.திரிபாதியும் இருந்தனர். இந்த ரயில்கள் எதிர் எதிரே வரும்போது தாமாகவே 380 மீட்டர் இடைவெளியிலேயே நின்றுவிட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை இந்திய ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. 

வெற்றிகரமான அந்த சோதனையைத் தொடர்ந்து, இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்த, மூன்று இந்திய நிறுவனங்களும் அங்கீகரிக்கப்பட்டன. கவாச் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக செய்யப்பட்ட மொத்த செலவு ரூ.16.88 கோடியாகும். டெல்லி-ஹவுரா மற்றும் டெல்லி-மும்பை மார்க்கத்தில் இந்த தொழில்நுட்பத்தை 2024ஆம் ஆண்டு மார்ச்சுக்குள் செயல்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

மக்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு - தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘கவாச் போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள், ரயில் செயல்பாடுகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.’ என்று தெரிவித்துள்ளார்.

“ கோரமண்டல் ரயில் விபத்து நடக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு..” ரயில்வே அதிகாரிகள் சொன்ன புதிய தகவல்கள்

ஒடிசா ரயில் விபத்தை கவாச் அமைப்பு தடுத்திருக்க முடியுமா?
இந்தியாவின் ரயில்வே வரலாற்றில் மிகவும் மோசமான விபத்தில் ஒன்றான, ஒடிசா ரயில்கள் விபத்தைத் தொடர்ந்து, கவாச் அமைப்பு பெரிதும் விவாதத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய ரயில்களில் ஏதானும் ஒன்றில் கவாச் அமைப்பு பொருத்தப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், கவாச் தொழில்நுட்பம் விபத்தை தடுத்திருக்க முடியும் என பலரும் விவாதிக்கின்றனர். ஆனால், அவை அனைத்துமே யூகங்களாகவே உள்ளன.

அதேசமயம், விபத்துக்குள்ளான ரயில் வழித்தடத்தில் ரயில் விபத்துகளை தவிர்க்கும் கவாச் என்று அழைக்கப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு அமைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, விபத்துக்குள்ளான ரயில் வழித்தடத்தில் ரயில் விபத்துகளை தவிர்க்கும் கவாச் எனும் பாதுகாப்பு அம்சம் அமைக்கப்படவில்லை என ரயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியபோது தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios