விபத்துக்கான காரணம் மற்றும் விவரங்களைப் பெற முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் அறிவித்தார்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தின் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், விபத்துக்கான காரணம் மற்றும் விவரங்களைப் பெற முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் அறிவித்தார். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு அமைச்சகம் உறுதியளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பாலசோரில் விபத்து நடந்த இடத்தில் மத்திய அமைச்சர் தற்போது உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 261 ஆக உயர்ந்துள்ளது, மேலும் தளத்தின் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. ரயிலின் உடைந்த பெட்டிகள், பெரிய கிரேன்கள் மற்றும் புல்டோசர்களைப் பயன்படுத்தி எழுப்பப்பட்டன. ஒடிசா மாநில பேரிடர் மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, இந்திய ராணுவம் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வந்தது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் - பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்தில் சிக்கின. இதில் 261 பேர் உயிரிழந்தனர், 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஒடிசாவுக்கு செல்ல உள்ள பிரதமர் நரேந்திர மோடி, புவனேஸ்வரில் இருந்து வடக்கே 170 கிமீ தொலைவில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் ரயில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடுவார் என்றும், கட்டாக்கில் உள்ள மருத்துவமனைகளில் காயமடைந்தவர்களைச் சந்திப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அம்மாநிலத்திற்கு வருகை தந்து, நிலைமையை ஆய்வு செய்யவும், காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் சந்திக்கவும் உள்ளார். முன்னதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் இன்று காலை பாலசோருக்குச் சென்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுடன் நிலைமையை ஆய்வு செய்தார்.
உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கில் ஒன்றாக இந்திய ரயில்வே உள்ளது. இந்திய ரயில்வே கடந்த பல ஆண்டுகளில் பல பேரழிவுகளைக் கண்டுள்ளது, 1981 ஆம் ஆண்டில் பீகாரில் ஒரு பாலத்தை கடக்கும்போது ரயில் தடம் புரண்டு கீழே உள்ள ஆற்றில் விழுந்ததில் 800 முதல் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1995 ஆம் ஆண்டு ஆக்ராவிற்கு அருகிலுள்ள ஃபிரோசாபாத் என்ற இடத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதியதில் 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்து 1995 க்குப் பிறகு நடந்த மிக மோசமான ரயில் விபத்து ஆகும். இது நாட்டின் 3-வது மிகப்பெரிய விபத்தாக கருதப்படுகிறது.
