ஒரு வாகனம் ஒரு ஃபாஸ்டேக்: ஜன., 31ஆம் தேதிதான் கடைசி நாள்!
‘ஒரு வாகனம் ஒரு ஃபாஸ்டேக்’ என்ற முன்முயற்சியைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது. இங்கு கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் போக்குவரத்து நெரிசலும், நேர விரயமும் ஏற்படுகிறது. இதனை களையும் பொருட்டு, ஃபாஸ்டேக் எனும் மின்னணு முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த ஃபாஸ்டேக் முறை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
அதேசமயம், ஒரே பாஸ்டேக்கைப் பயன்படுத்தி பல வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், ஒரு குறிப்பிட வாகனத்துக்கு பல ஃபாஸ்டேகுகள் கொடுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில், ‘ஒரு வாகனம் ஒரு ஃபாஸ்டேக்’ என்ற புதிய திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கொண்டு வந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை அனுபவத்தை மேம்படுத்த, 'ஒரு வாகனம் ஒரு பாஸ்டேக்' முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “மின்னணு கட்டண வசூல் முறையின் செயல்திறனை அதிகரிக்கவும், சுங்கச்சாவடிகளில் தடையற்ற இயக்கத்தை வழங்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 'ஒரு வாகனம், ஒரு ஃபாஸ்டேக்' முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது பல வாகனங்களுக்கு ஒரே பாஸ்டேக்கைப் பயன்படுத்துவது அல்லது ஒரு குறிப்பிட்ட வாகனத்துடன் பல பாஸ்டேக்குகளை இணைப்பது போன்ற பயனர் நடவடிக்கைகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் -கேஒய்சி-யைப் புதுப்பிப்பதன் மூலம் தங்கள் சமீபத்திய ஃபாஸ்டேகின் கேஒய்சி செயல்முறையை முடிப்பதற்கு பாஸ்டேக் பயனர்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஊக்குவிக்கிறது. செல்லுபடியாகும் இருப்புத் தொகை கொண்ட ஆனால் முழுமையற்ற கேஒய்சி கொண்ட ஃபாஸ்டேகுகள் 2024 ஜனவரி 31ஆம் தேதிக்குப் பிறகு வங்கிகளால் செயலிழக்கச் செய்யப்படும் / கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்.
அசௌகரியத்தைத் தவிர்க்க, பயனர்கள் தங்கள் சமீபத்திய ஃபாஸ்டேகின் கேஒய்சி நிறைவடைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஃபாஸ்டேக் பயனர்கள் 'ஒரு வாகனம், ஒரே பாஸ்டேக்' உடன் இணங்க வேண்டும். அந்தந்த வங்கிகள் மூலம் முன்னர் வழங்கப்பட்ட அனைத்து ஃபாஸ்டேகுகளையும் அகற்ற வேண்டும். முந்தைய குறிச்சொற்கள் 2024 ஜனவரி 31ஆம் தேதிக்கு பிறகு செயலிழக்கச் செய்யப்படும் / கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதால் சமீபத்திய ஃபாஸ்டேக் கணக்கு மட்டுமே செயலில் இருக்கும். மேலும் உதவி அல்லது கேள்விகளுக்கு, பாஸ்டேக் பயனர்கள் அருகிலுள்ள சுங்கச்சாவடிகள் அல்லது அந்தந்த வங்கிகளின் கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை எண்ணை அணுகலாம்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பு? துர்கா ஸ்டாலின் எடுத்த முடிவு!
ரிசர்வ் வங்கியின் ஆணையை மீறி ஒரு குறிப்பிட்ட வாகனத்திற்கு பல பாஸ்டேகுகள் வழங்கப்படுவதாகவும், கேஒய்சி இல்லாமல் ஃபாஸ்டேகுகள் வழங்கப்படுவதாகவும் வெளியான சமீபத்திய அறிக்கைகளைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த முயற்சியை எடுத்துள்ளது. இது தவிர, வாகனத்தின் விண்ட்ஸ்கிரீனில் சில நேரங்களில் பாஸ்டேகுகள் வேண்டுமென்றே பொருத்தப்படுவதில்லை, இதன் விளைவாக சுங்கச்சாவடிகளில் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுகின்றன மற்றும் சக தேசிய நெடுஞ்சாலை பயனர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன.
சுமார் 8 கோடிக்கும் (98 %) அதிகமான பயனர்களுடன், ஃபாஸ்டேக் நாட்டில் மின்னணு சுங்க வசூல் முறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. 'ஒரு வாகனம், ஒரு பாஸ்டேக்' முன்முயற்சி சுங்கச்சாவடி நடவடிக்கைகளை மிகவும் திறமையானதாக மாற்றவும், தேசிய நெடுஞ்சாலைப் பயனர்களுக்குத் தடையற்ற மற்றும் வசதியான பயணங்களை உறுதிப்படுத்தவும் உதவும்.