அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பு? துர்கா ஸ்டாலின் எடுத்த முடிவு!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் துர்கா ஸ்டாலின் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வருகிற 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.ஹெச்.பி. நிர்வாகிகள் நேரில் சந்தித்து அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமியில் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக அழைப்பிதழை கொடுத்து அழைப்பு விடுத்தனர். மேலும், ராமருக்கு பூஜை செய்த அக்ஷதையும் அப்போது அவர்கள் துர்கா ஸ்டாலினுக்கு கொடுத்தனர்.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் துர்கா ஸ்டாலின் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்கையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்ற ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளை இன்முகத்தோடு வரவேற்று அழைப்பிதழை பெற்றுக் கொண்ட துர்கா ஸ்டாலின், திறப்பு விழா நல்லபடியாக நடக்கட்டும். ஒரு நாள் கட்டாயம் அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகிறேன் என அவர்களிடம் சொல்லி அனுப்பியதாக தெரிகிறது.
காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
இதன் மூலம், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் துர்கா ஸ்டாலின் கலந்து கொள்ளமாட்டார் என தெரிகிறது. முன்னதாக, ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை பாஜக அரசியலாக்கப் பார்க்கிறது எனவும், கட்சி சார்ந்த மத விழாவாக அதனை முன்னெடுப்பதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ்., பாஜக விழா என கூறி அயோத்தி ராமர் கோயில் அழைப்பிதழை மரியாதையுடன் நிராகரிப்பதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.