பிரதமர் நரேந்திர மோடியின் ஃபிட்னஸ் வீடியோ அண்மையில் வெளியான நிலையில், இதற்காக மட்டும் ரூ.35 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தற்போது செய்தி வெளியாகி உள்ளது. மக்களின் பணத்தை வீணடிப்பதாக காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் கோலியின் சேலஞ்சை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி, ஃபிட்னெஸ் வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்ட இந்த வீடியோ வைரலாக பரவியது. இந்த வீடியோ பற்றி பல்வேறு கருத்துக்கள் நெட்டிசன்களால் கூறப்பட்டு வந்தன.

இந்த நிலையில், பிரதமர் மோடி வெளியிட்ட இந்த வீடியோவிற்காக எவ்வளவு செலவிடப்பட்டது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த வீடியோ ஒரே நாளில் எடுக்கப்பட்டது கிடையாது என்றும் இதற்காக மூன்று நாள் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எடுக்கப்பட்ட காட்சிகளை எடிட் செய்ய இரண்டு நாட்கள் ஆனதாகவும், எடிட்டிங்கிற்காக பாலிவுட்டின் புகைப்பட கலைஞர் ஒருவர் வரவழைக்கப்பட்டு வீடியோ வேலைகள் முடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

வீடியோ எடித்தது, எடிட்டிங் வேலை என மொத்தம் ரூ.35 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நாளுக்கு ரூ.12 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி ஃபிட்னஸ் வீடியோ எடுப்பதற்கு செலவிடப்பட்ட மொத்த தொகை மக்களுடையது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் காங்கிரசின் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. இது மக்கள் பணம் அல்ல என்றும் ஸ்பான்சர் கொடுத்த பணம் என்றும் பாஜக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.