குளிர்காலத்தில் தீயருகே அமர்ந்திருந்த நண்பர்கள் குழுவில், ஒருவர் மற்றவரின் நாற்காலியை தட்டிவிட, பழிவாங்கும் நோக்கில் அந்த நாற்காலியில் எரிபொருளை ஊற்றி தீ வைக்கப்பட்டது. இந்த பகீர் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நண்பர்களுக்குள் விளையாட்டாக செய்யப்படும் சில விஷயங்கள் சில நேரங்களில் விபரீதத்தில் முடிந்துவிடுகின்றன. அப்படி ஒரு பகீர் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

கடும் குளிரான ஒரு இரவில், சாலையோரத்தில் ஒரு இளைஞர் குழு தீ மூட்டி தங்களை குளிர்காய்ந்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு இளைஞர் விளையாட்டாக, அருகில் அமர்ந்திருந்த தனது நண்பரின் பிளாஸ்டிக் நாற்காலியைப் பிடுங்கி அவரை கீழே விழ வைத்தார்.

கீழே விழுந்த அந்த நண்பர் ஆத்திரமடையாமல் அமைதியாக எழுந்து வேறு ஒரு நாற்காலியில் அமர்ந்தார். ஆனால், யாரும் கவனிக்காத நேரத்தில் ஒரு பாட்டிலில் இருந்த எரிபொருளை தான் முன்பு அமர்ந்திருந்த நாற்காலியில் ஊற்றினார்.

பகீர் திருப்பம்

சிறிது நேரத்திற்குப் பிறகு, கிண்டல் செய்த அந்த இளைஞர் அதே நாற்காலியில் வந்து அமர்ந்தார். அப்போது அந்த மற்றொரு இளைஞர் சத்தமில்லாமல் தீப்பெட்டியை உரசி நாற்காலியின் அருகில் காட்டினார். அடுத்த நொடியே பிளாஸ்டிக் நாற்காலி தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில் அமர்ந்திருந்த இளைஞரின் உடையில் தீப்பிடித்தது.

பயத்தில் அலறிய அந்த இளைஞர், தரையில் உருண்டு புரண்டு ஒருவழியாகத் தீயை அணைத்தார். அதிர்ஷ்டவசமாக அவர் பெரிய காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்.

View post on Instagram

நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ 'Sole of India' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்:

"உங்கள் எதிரி யார் என்பது உங்களுக்குத் தெரியும்" என ஒருவர் பதிவிட்டுள்ளார். "ஆண்கள் ஏன் நீண்ட காலம் உயிர் வாழ்வதில்லை என்பதற்கு இதுவே சாட்சி" என மற்றொருவர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

"அவர் நிஜமாகவே அவரை 'ரோஸ்ட்' (Roast) செய்துவிட்டார்" என இன்னொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.

விளையாட்டுக்காகச் செய்யப்படும் இத்தகைய செயல்கள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.