உத்தரப்பிரதேசத்தில், நாயை சித்ரவதை செய்து கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர் வீடியோ வைரலானதை அடுத்து, விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாயில்லா ஜீவனான நாயைச் சித்ரவதை செய்து, அதனை மது குடிக்க வைத்த இளைஞர் ஒருவரை உத்தரப்பிரதேச மாநில போலீசார் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
வைரல் வீடியோ
சமூக வலைதளங்களில் சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது. அதில் இளைஞர் ஒருவர் நாயை மிகவும் கொடூரமான முறையில் சித்ரவதை செய்ததோடு, மது பாட்டில் மூலம் ஒரு போதைப் பொருளை அதன் வாயில் கட்டாயப்படுத்தி ஊற்றுவது பதிவாகியிருந்தது. இந்த வீடியோ விலங்கு ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து பாபத் (Baghpat) மாவட்டத்தின் சமூக ஊடகப் பிரிவும், ராமலா (Ramala) காவல் நிலையமும் தானாக முன்வந்து விசாரணை நடத்தின. விசாரணையில் அந்த நபர் கிர்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா (என்கிற பல்லம்) என்பது தெரியவந்தது.
கைது மற்றும் சட்ட நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ஜிதேந்திராவை ராமலா போலீசார் ஞாயிற்றுக்கிழமை சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
அவர் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் (Prevention of Cruelty to Animals Act) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், மேலும் இது தொடர்பான மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.
"விலங்குகளுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது" என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


