வரும் 2026 குடியரசு தின அணிவகுப்பில், இந்திய ராணுவத்தின் கால்நடை படைப்பிரிவு முதல் முறையாகப் பங்கேற்க உள்ளது. லடாக்கில் பணியாற்றும் ஒட்டகங்கள், குதிரைகள், உள்நாட்டு நாய் இனங்கள் மற்றும் வேட்டைப் பறவைகள் கடமைப் பாதையில் அணிவகுத்துச் செல்லும்.
வரும் 2026 குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இந்திய ராணுவத்தின் கால்நடை படைப்பிரிவு முதன்முறையாகப் பங்கேற்க உள்ளது. ராணுவத்தின் 'ரிமவுண்ட் அண்ட் வெட்டர்னரி கோர்ஸ்' (RVC) சார்பில் பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்ட இந்தப் பிரிவு கடமைப் பாதையில் (Kartavya Path) அணிவகுத்துச் செல்ல உள்ளது.
நாட்டின் சவாலான எல்லைப் பகுதிகளில் பணியாற்றும் இந்த விலங்குகளின் தியாகத்தைப் பறைசாற்றும் வகையில் இந்த நிகழ்வு அமையவுள்ளது.
அணிவகுப்பில் இடம்பெறும் விலங்குகள்
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அணிவகுப்பில் ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விலங்குகள் இடம்பெறுகின்றன.
• 2 பாக்டிரியன் ஒட்டகங்கள்: லடாக்கின் குளிர் பாலைவனங்களில் 15,000 அடி உயரத்தில் 250 கிலோ எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டவை.
• 4 சன்ஸ்கார் பொன்னி குதிரைகள்: லடாக்கின் பூர்வீக இனமான இவை, மைனஸ் 40 டிகிரி குளிரையும் தாங்கி சியாச்சின் போன்ற பகுதிகளில் ரோந்துப் பணிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
• 16 ராணுவ நாய்கள்: இதில் 10 நாய்கள் சிப்பிப்பாறை, கோம்பை, ராஜபாளையம், முடோல் ஹவுண்ட் மற்றும் ராம்பூர் ஹவுண்ட் போன்ற இந்தியப் பூர்வீக இனங்களைச் சேர்ந்தவை. 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தின் கீழ் இவை ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
• 4 வேட்டைப் பறவைகள் (Raptors): கண்காணிப்பு மற்றும் பறவைகள் தாக்குதலைக் கட்டுப்படுத்த இவை பயன்படுத்தப்படுகின்றன.
தனித்துவமான சிறப்பம்சங்கள்
இந்த விலங்குகள் இயந்திரங்களால் எட்ட முடியாத இமயமலையின் செங்குத்தானப் பகுதிகள் மற்றும் பனிச்சிகரங்களில் இந்திய ராணுவத்தின் முதுகெலும்பாகச் செயல்படுகின்றன.
• அதிநவீன கண்காணிப்பு: ராணுவ நாய்கள் பயங்கரவாத எதிர்ப்பு, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் மீட்புப் பணிகளில் 'மௌன வீரர்களாக' (Silent Warriors) செயல்பட்டுப் பல வீர விருதுகளை வென்றுள்ளன.
• சுயசார்பு இந்தியா: இந்தியப் பூர்வீக நாய் இனங்களை ராணுவத்தில் பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் சுயசார்பு நிலை உலகிற்குப் பறைசாற்றப்பட உள்ளது.
ராணுவம் என்பது வெறும் வீரர்கள் மற்றும் இயந்திரங்கள் சார்ந்தது மட்டுமல்ல; இக்கட்டான சூழலில் தோளோடு தோள் நின்று பணியாற்றும் இந்த விலங்குகளும் ராணுவத்தின் அங்கமே என்பதை இந்த அணிவகுப்பு உலகிற்கு உணர்த்தும்.


