சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமனம் செய்வது, துணைவேந்தரை நீக்கம் செய்வதற்கான அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கும் மசோதாவை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திருப்பி அனுப்பினார்.

சென்னை பல்கலைக்கழக சட்டத்தில் துணைவேந்தரை நியமனம் செய்யும் அதிகாரத்தில் வேந்தருக்கு பதிலாக தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அரசு என திருத்தம் செய்யப்பட்டது. மேலும் துணைவேந்தரை நீக்கும் அதிகாரமும் கூடுதலாக சேர்க்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியைக் கொண்ட குழுவின் விசாரணை அறிக்கை மூலமாக அரசு ஆணையால் மட்டுமே துணைவேந்தர் நீக்கப்படுவார் எனவும் குறிப்படப்பட்டு இருந்தது.

மேலும் தமிழக அரசின் நிதித்துறைச் செயலாளர் அல்லது சட்டத்துறை செயலை சென்னை பல்கலைக்கழகத்தி் சிண்டிகேட் உறுப்பினராக சேர்ப்பது குறித்தும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் ரவி பரிந்துரை செய்தார். இந்த நிலையில் சுமார் 3 ஆண்டுகளாக கிடப்பில் வைக்கப்பட்டிருந்த இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தற்போது திரும்ப அனுப்பி உள்ளார்.

நாடாளுமன்ற சட்டத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டு, பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு முரணாக இருக்கும் மசோதாக்கள் மாநில சட்டப்பேரவை வரம்புக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படும். ஆகவே இந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக ஆளுநர் ரவி குறிப்பிட்டு இருந்தார்.