மலப்புரம் சோகம்.. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ ஹெலிகாப்டரை அனுப்பியது இந்திய கடற்படை..

கேரளாவின் மலப்புரத்தில் படகு விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் உதவுவதற்காக இந்திய கடற்படை ஹெலிகாப்டரை அனுப்பி உள்ளது.

Malappuram Tragedy..Indian Navy sent helicopter to help search and rescue operations..

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் 40 பேருடன் சென்ற சுற்றுலா சொகுசு படகு நேற்றிரவு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீரில் மூழ்கிய 20 பேரை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த படகில் 25 பேர் ஏற்ற வேண்டிய படகில் 40 பேர் வரை ஏற்றியதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படகில் பயணித்தவர்கள்  யாரும் லைஃப் ஜாக்கெட் அணியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : குமரகம் முதல் தனுர் வரை: இதுவரை கேரளாவை உலுக்கிய பெரும் படகு விபத்துகள்..

இந்நிலையில் மலப்புரம் படகு விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு கேரள அரசு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து நீதி விசாரணை நடத்தவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திங்கள்கிழமை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளதாகவும் கேரள அரசு அறிவித்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் இந்திய கடலோர காவல்படை குழுக்கள், காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உடல்கள் மீட்கப்பட்ட 22 பேரும் அடையாளம் காணப்பட்டதாக மூத்த மாவட்ட அதிகாரி  ஒருவர் தெரிவித்துள்ளார். அனைத்து ஏஜென்சிகளின் உதவியையும் கோரியுள்ளோம். NDRF மற்றும் கடலோர காவல்படை குழுக்கள் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு வந்துவிட்டன. நாங்கள் கடற்படையின் உதவியையும் நாடியுள்ளோம்" என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.  மேலும் கடலில் கவிழ்ந்த படகில் இருந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். 

இந்த நிலையில் கேரளாவின் மலப்புரத்தில் படகு விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் உதவுவதற்காக இந்திய கடற்படை ஹெலிகாப்டர் சேடக்-ஐ அனுப்பியது. இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கேரள அரசின் உதவியின் பேரில், கொச்சியில் உள்ள தெற்கு கடற்படைக் கட்டளையிலிருந்து இன்று கடற்படை வீரர்களை உள்ளடக்கிய கடற்படை ஹெலிகாப்டர் உடனடியாக ஏவப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் முதற்கட்ட வான்வழி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. என்.டி.ஆர்.எஃப் மற்றும் உள்ளூர் டைவிங் குழுவினருடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. பல்வேறு வகையான கடற்படை ஹெலிகாப்டர்கள் சிவில் நிர்வாகத்திற்கு தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளுக்கு உதவ திட்டமிடப்பட்டுள்ளது. தேடுதல் நடவடிக்கைகளை அதிகரிக்க பேரிடர் மேலாண்மை மற்றும் மாநில அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பு பராமரிக்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கேரள படகு விபத்து: ரூ.10 லட்சம் நிதியுதவி.. நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட கேரள முதலமைச்சர்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios