மத்தியப் பிரதேசத்தில் அரசியல்வாதிகள் முதல் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரின் அந்தரங்கம் அடங்கிய பல்வேறு செக்ஸ் வீடியோக்களை வைத்து அவர்களை பெண்கள் சிலர் பிளாக்மெயில் செய்து பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த கார்ப்பரேஷன் அதிகாரி ஹர்பஜன் சிங் என்பவர் பலசியா காவல்நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை புகார் ஒன்றை அளித்தார். அதில், ``ஷிவானி மற்றும் ப்ரீத்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்கள் என்னுடன் உறவு வைத்துக்கொண்டனர். அதை வீடியோவாக எடுத்து என்னை மிரட்டி வருகின்றனர். பல முறை அவர்களுக்கு பணம் கொடுத்துவிட்டேன். இப்போது 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார்கள் என தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இது தொடர்பாக 5 பெண்களை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்களிடம் இருந்த லேப்டாப்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மாநிலத்தையே உலுக்கும் வகையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியாகியுள்ளது. அதில், மூத்த அரசு அதிகாரிகள் முதல் இளநிலை இன்ஜினியர்கள் வரையும், முக்கிய பொறுப்பில் உள்ள பாஜக நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பான செக்ஸ் வீடியோக்கள், அதிகாரிகளின் அந்தரங்க புகைப்படங்கள் இருந்தன.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தோண்ட தோண்ட பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய செக்ஸ் மோசடியாக இது கருதப்படுகிறது. இந்நிலையில், வித்யா, சோனியா, நிஷா, ஷிவானி, ப்ரீத்தி (அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) என சிக்கிய 5 பேரும் தோழிகள். இவர்களின் வேலை அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை அனுப்பி வைப்பதுதான்.

அப்படி அனுப்பி வைக்கும்போது அவர்களுக்குத் தெரியாமலேயே அங்கு நடப்பதை வீடியோவாக செல்போனில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். பின்னர், அதைவைத்து அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை பலரையும் மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.