தற்போது விரிவான விவாதங்களும் ஆய்வுகளும் இல்லாமலேயே சட்டங்கள் இயற்றப்படுகின்றன என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா தெரிவித்துள்ளார்.  

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 18-ஆவது அகில இந்திய சட்டச் சேவைகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பங்கேற்று பேசினார். அவருடைய பேச்சு தற்போது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அந்தக் கூட்டத்தில் தலைமை நீதிபதி பேசிய விஷயம் இதுதான். “முன்பு அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே பரஸ்பரம் மரியாதை இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தற்போது அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே மரியாதை குறைந்து வருகிறது. இப்படி நடப்பது நாட்டுக்கும் நல்லது அல்ல. நாட்டின் சட்டம் இயற்றும் அவைகளின் செயல்பாட்டுகளின் தரம் கவலை அளிக்கும் வகையில் உள்ளன.

இதையும் படிங்க: சட்டென சரியும் எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு... ஏன் தெரியுமா?

அவையில் விரிவான விவாதங்களும் ஆய்வுகளும் இல்லாமலேயே சட்டங்கள் இயற்றப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதங்கள் இல்லாததால், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கான இடம் குறைந்து விட்டது. அதோடு, ஆரோக்கியமான விவாதம் இல்லாமலும் ஆகிவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் மாநில சட்டமன்றங்கள் குறைந்தபட்சம் இத்தனை நாட்கள் கூட வேண்டும் என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடவில்லை. என்றாலும், நீண்ட நாட்கள் சட்டமன்றம் கூடினால் அதன் காரணமாகக் குடிமக்கள் பயன் அடைவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. என்னுடைய ஒரே கவலை, சட்டத்தை இயற்றுவதில் உள்ள குறைபாடுகள் காரணமாக நீதித்துறையின் மீது அந்த சுமை சுமத்தப்படலாம்.

இதையும் படிங்க: விமான நிலையத்தில் தள்ளாடிய ஏக்நாத் ஷிண்டே... இது தான் காரணமா?

மசோதாக்கள் முழுமையாக விவாதிக்கப்பட்டால்தான், நமக்கு சிறந்த சட்டங்கள் கிடைக்கும். இளைஞர்கள் ஜனநாயகத்தின் அடிப்படை ஆவார்கள். எதிர் கால இந்தியாவை உருவாக்கப் போகிறவர்களும் இளைஞர்கள்தான். எனவே, இன்றைய இளைஞர்கள் விழிப்புணர்வும் அறிவும் பெற வேண்டும். அதன் மூலம் ஜனநாயக அமைப்பில் தங்களுடைய பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்" என்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்தார்.

இதையும் படிங்க: மம்தாவின் எதிரி டூ பாஜக வேட்பாளர் ; யார் இந்த ஜெகதீப் தங்கர் ? முழு தகவல்கள் இதோ !