மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சி தலைவர் ராஜ்தாக்கரேவை, நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரடிஜனிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியிட்டிருந்தார். அதற்கு வழி அமைக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்றம் களமிறங்கி உள்ளது. இதன் முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. 

காலா படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது. புதிய படத்தின் படப்பிடிப்பில் ரஜினி இருந்து வருகிறார்.

இந்த நிலையில், மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சி தலைவர் ராஜ்தாக்கரேவை, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்துப் பேசியுள்ளார். ராஜ்தாக்கரேவை, நடிகர் ரஜினிகாந்த் இதற்கு முன்பே சில முறை சந்தித்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு பால் தாக்ரேவை சந்தித்த ரஜினிகாந்த், அவரை தனக்குக் கடவுளைப் போன்றவர் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், லதா ரஜினிகாந்த், ராஜ்தாக்கரே இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளார்.

அதேபோல், ராஜ்தாக்கரே மனைவி ஷர்மிளாவையும் சந்தித்து லதா ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக அவர் சரியான உடல்நிலையில் இட்லலை என்பதால் அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின்போது பல விஷயங்கள் பற்றி பேசியதாக தெரிகிறது.

ராஜ்தாக்கரே-ஷர்மிளாவைச் சந்தித்தப்பின் லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியல், சமூகப்பணி, சினிமா உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறினார். நடிகர் ரஜினிகாந்த், விரைவில் ராஜ் தாக்ரேவை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக கூறியுள்ள நிலையில், லதா ரஜினிகாந்த், பால்தாக்கரேவை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ராஜ்தாக்கரே வெளியிட்ட டுவிட்டரிலும், லதா ரஜினிகாந்த் உடன் அரசியல் குறித்தெல்லாம் பேசியதாக பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக கூறி உள்ள நிலையில், லதா ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டு வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.