மனைவியின் தொல்லை தாங்காமல் தாய் வீட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞரின் இருகாதுகளையும், அவரது 40 வயது மனைவி அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே நர்கெல்தங்கா பகுதியைச் சேர்ந்த தன்வீர் என்ற இளைஞர், அந்த ஊருக்கு புதிதாக வந்த மும்தாஜ் என்ற இளம்பெண்ணை காதலித்தார். இளம்பெண்ணும் தன்வீரின் காதலை ஏற்றுக் கொண்டதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த பிறகுதான், தான் திருமணம் செய்து கொண்ட மும்தாஜுக்கு வயது தன்னைவிட இருமடங்கு அதிகம் என இளைஞருக்கு தெரியவந்தது. 

இது குறித்து இளைஞர் கேட்கத் தொடங்கியதில் இருந்து, அவரை மனைவி மும்தாஜ் கொடுமைப் படுத்தத் தொடங்கினார். மேலும் தன்வீரின் தாயையும் அவர் கொடுமைப்படுத்தியதால், இருவரும் செய்வதறியாது தவித்து வந்தனர். 40 வயது மனைவியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியதால், அவரை விட்டு பிரிய நினைத்த இளைஞர், காவல்நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், உறவினர் வீட்டுக்கு இளைஞர் தப்பிச் சென்றதை அறிந்த மனைவி, அடியாட்களை ஏவி பாதி வழியிலேயே கணவனை பிடித்துக் கொண்டுவந்து, சரமாரியாக தாக்கினார்.

இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து, சொந்தமாக இருந்த வீட்டை விற்ற தன்வீரின் தாய், உறவினர்கள் சிலர் வாழும் கிராமத்துக்குச் சென்றுவிட்டார். உறவினர்கள் வசிக்கும் கிராமத்துக்குச் செல்லும் முன், வீட்டை விற்ற பணத்தில் இருந்து பெருந்தொகையை தன்வீருக்கு அவரது தாய் கொடுத்துவிட்டுச் சென்றார். அந்த பணத்தையும் அபகரித்துக் கொண்ட தன்வீரின் மனைவி மும்தாஜ், தமது கணவனை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தார். இதையடுத்து, தாய் இருக்கும் கிராமத்துக்கே தன்வீரும் தப்பிச் செல்ல முயன்று, அருகாமையில் இருக்கும் நகருக்குச் சென்று பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தார். 

கணவன் தப்பிச் செல்லும் தகவலை அறிந்து கொண்ட மும்தாஜ், தனது தங்கையையும் அடியாட்களையும் ஏவி, தன்வீரை பிடித்துவரச் சொன்னார். தன்வீரை அனைவரும் பிடித்து வந்ததும், துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டி, கணவனின் இருகாதுகளையும் மும்தாஜ் அறுத்தார். தகவல் அறிந்து அங்கு வந்து கதறிய தன்வீரின் தாய் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மும்தாஜையும், அவரது தங்கையையும் விசாரித்து வருகின்றனர்.