அச்சு அசலாக மோடியே யோகா செய்வது போன்ற வேற லெவல் அனிமேஷன்... பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோ வைரல்
Yoga with PM Modi: யோகாசனம் செய்வது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 21ஆம் தேதி அன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி வீடியோ ஒன்றினை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவரை போன்ற தோற்றத்தில் யோகா செய்யும் அனிமேஷன் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான ட்விட்டர் பதிவில், யோகாவின் நன்மைகள் உலகளவில் பிரபலமடைய வேண்டும் என பிரதமர் மோடி மனம் நெகிழ்ந்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். உடலும் மனதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க யோகா செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கவிருக்கிறார். இந்த விழாவில் ஐநா சபையின் தலைவர் சபா கொரோசியும் பங்கேற்கிறார். இது தொடர்பாக கொரோசி பகிர்ந்த ஒரு ட்வீட்டில், "அடுத்த வாரம் ஐநா சபையின் 9வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியுடன் ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்"எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி, "ஐநா சபையின் தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் உங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நீங்கள் அந்த நிகழ்வில் பங்கேற்பது நிகழ்வை இன்னும் சிறப்பாக மாற்றும். ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதை நோக்கி யோகா உலகை இணைக்கிறது. ஆகவே யோகாவை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுங்கள்" என வலியுறுத்தியுள்ளார். அவர் பல்வேறு ஆசனங்களை சித்தரிக்கும் அனிமேஷன் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் “உடலுக்கும் மனதுக்கும் யோகா நன்மை பயக்கும். இது வலிமை, நெகிழ்வு, அமைதியை ஊக்குவிக்கிறது. யோகாவை நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றி, உடலும் மனமும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்போம். இதுவும் அமைதியைத் தரும்"எனக் கூறியுள்ளார்.