Asianet News TamilAsianet News Tamil

வருமானவரி விலக்கு ரூ. 4 லட்சமாக உயர்கிறது ?

income tax-department
Author
First Published Dec 20, 2016, 5:26 PM IST


வருமானவரி விலக்கு தற்போதுள்ள ரூ.2.50 லட்சத்தில் இருந்து, ஆண்டுக்கு ரூ. 4 லட்சமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கான முறைப்படியான அறிவிப்பு 2017-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி பொது பட்ஜெட்டில் வெளியாகும் எனத் தெரிகிறது.

அதிருப்தி

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வங்கியில் மக்கள்தங்களின் சேமிப்பைக் கூட எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஏ.டி.எம்.களிலும், வங்கிகளிலும் பணம் இல்லாததால், மக்கள் திண்டாடி வருகின்றனர்.

பொருளாதாரம் மந்தம்

இதனால், மக்களின் வாங்கும் சக்தி குறைந்து, செலவை செயற்கையாக குறைக்கும் சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், சிறு வியாபாரிகளின் வியாபாரம் மந்தமாகி, பெரிய பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்களிலும் ஆள்குறைப்பு நடவடிக்கையை செய்து வருகின்றனர். இதனால், பொருளாதார வளர்ச்சி மந்த கதியை நோக்கி வருகிறது.

மோடி திட்டம்

இதையடுத்து, மக்களின் வலியையும், வேதனையையும் போக்கு விதத்திலும், பொருளாதார வளர்ச்சியை தூண்டிவிட, மக்களின் வாங்கும் சக்தியை அதிகப்படுத்த, வருமான வரி உச்சவரம்பை அதிகப்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பை மத்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் முன்பாக, இதற்குரிய அறிவிப்பை முறைப்படி அரசு அறிவிக்கும் எனத் தெரிகிறது.

வரி வீதம்

இப்போதுள்ள முறைப்படி, ஆண்டுக்கு ரூ. 2.50 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்கள் வருமானவரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின், ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 15 சதவீதம், ரூ. 10 லட்சத்துக்கு மேல் 20 சதவீதம், ரூ. 20 லட்சத்துக்கு அதிகமாக 30 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டு வருகிறது.

பயன்

இந்நிலையில்,வருமானவரி விலக்கு ரூ. 4 லட்சமாக அதிகரிக்கப்படும் போது, நடுத்தரப் குடும்பத்து பிரிவினர் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த செய்தியை மத்திய அரசின் செய்தித்தொடர்பாளர் பிராங்க் நோரோனா மறுத்துள்ளார். இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios