டெல்லியில் பா.ஜனதா கட்சிக்கு தாவிய எம்.எல்.ஏ. பதவி விலகியதால் நடந்த இடைத் தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர், 24 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

யூனியன் பிரதேசமான டெல்லியில், கடந்த சட்டமன்ற தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, பா.ஜனதா மற்றும் காங்கிரசை வீழ்த்தி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

ஆட்சி அமைத்ததில் இருந்தே மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கும் கெஜ்ரிவால் அரசுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது.

இந்த நிலையில், டெல்லியின் பவானா தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட இருந்த வேதப்பிரகாஷ் என்பவர், அந்தக் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.

அப்போது தனது எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்துவிட்டார். இதனால் அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில், ‘கட்சி மாறி’ எம்.எல்.ஏ.வான வேதப்பிரகாஷ்தான் பா.ஜனதா வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தார்.

ஆனால், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட ராம் சந்தர், 24 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில், பா.ஜனதா வேட்பாளர் வேதப்பிரகாஷ் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்தர் குமார் இருவரையும் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

ஆம் ஆத்மி வேட்பாளருக்கு 59 ஆயிரத்து 886 ஓட்டுகளும், பா.ஜனதா வேட்பாளருக்கு 35 ஆயிரத்து 834 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளருக்கு 31 ஆயிரத்து 919 ஓட்டுகளும் கிடைத்து இருந்தன.

சிறிய மாநிலமான டெல்லியில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி பாவனாதான். இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 2 லட்சத்து 94 ஆயிரமாகும். கடந்த 23-ந்தேதி நடைபெற்ற தேர்தலில் 45 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.

டெல்லியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த தொகுதியில், குடிசைப்பகுதி, கிராமங்கள் மற்றும் பூர்வாஞ்சல் (கிழக்கு உத்தரப்பிரதேசம்) பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள்.

4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற டெல்லி நகராட்சி தேர்தலில் முழுமையான வெற்றி பெற்ற பா.ஜனதா, சமீபத்தில் நடந்த ரஜோரி கார்டன் தொகுதி இடைத் தேர்தலிலும் வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில் பவானா தொகுதி தேர்தல், பா.ஜனதாவுக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

தேர்தல் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்-அமைச்சருமான கெஜ்ரிவால், தொகுதி மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். ‘கட்சி மாறி’களுக்கு டெல்லி மக்கள் தகுந்த பாடம் புகட்டி இருப்பதாக, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.