பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டபின், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் சிங்குக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பை அரியானா அரசு ரத்து செய்துள்ளது.அரியானா தலைமைச் செயலாளர் டி.எஸ். தேசாய் சண்டிகரில் கூறியதாவது-

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டவுடன் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு வழங்கப்பட்ட ‘இசட்’ பிரிவு  பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. அவருக்கு ரோடாக் சிறையில் எந்த விதமான சிறப்பு வசதிகளும் செய்யப்படவில்லை. சாதாரண கைது போலவே நடத்தப்படுகிறார். சிறையில் வழங்கப்படும் உணவையே அவர் சாப்பிடுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெட்டி தூக்கிய அரசு வழக்கறிஞர் நீக்கம்

சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லும்போது, அவரின் உடமைகள், சூட்கேஸ்களை தூக்கிச் சென்ற அரசு துணை வழக்கறிஞரை நீக்கி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து அரியானா அரசு தலைமை வழக்கறிஞர் பால்தேவ் ராஜ் மகாஜன் கூறுகையில், “ சாமியார் குர்மீத் சிங்கின் உடைமைகளை தூக்கிச் சென்ற அரசு துணை வழக்கறிஞர் குருதாஸ் சல்வாராவை பதவியில் இருந்து நீக்கி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு துணை வழக்கறிஞர் என்பவர் அரசு ஊழியர், அவர் வேறு யாருக்கும் பணிவிடை செய்ய அமர்த்தப்படவில்லை. இதுபோன்ற செயல்களை அரசு பார்த்துக்கொண்டு இருக்காது’’ என்றார்.