ஜி.எஸ்.டி. வரி செப்டம்பரில்தான் நடைமுறைக்கு வர வாய்ப்பு?... 8-வது கவுன்சில் கூட்டமும் ‘இழுபறியில்’ முடிந்தது

8-வது முறையாக கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மத்தியஅரசு, மாநில அரசுகளுக்கு இடையே முக்கிய விசயங்களில் கருத்து ஒற்றுமை ஏற்படாததால், முடிவின்றி இந்த முறையும் கூட்டம் முடிந்தது. இதனால், செப்டம்பர் மாதம்தான் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் குழு கூட்டம் வரும் 16-ந்தேதி கூடுகிறது.

குறிப்பிட்ட வருவாய் ஈட்டும் பிரிவினரை மத்திய ஜி.எஸ்.டி. அல்லது மாநில ஜி.எஸ்.டி. பிரிவுக்குள் கொண்டு வருவதா?,  கடல்வழி கொண்டு வரப்படும் பொருட்களுக்கு வரியை யார் விதிப்பது? உள்ளிட்ட விசயங்களில் முடிவு எட்டப்படவில்லை.

ஏப்ரலில் திட்டம்

மத்திய அரசு அடுத்த நிதியாண்டு முதல் சரக்கு மற்றும் சேவை வரியை(ஜி.எஸ்.டி.) நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்காக ஜி.எஸ்.டி.க்கு துணைச் சட்டங்களான மாநில ஜி.எஸ்.டி., மத்திய ஜி.எஸ்.டி., ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. ஆகியவற்றை வகுக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு தலைவராக நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும், மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

8-வது கூட்டம்

இதுவரை 7 முறை ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடந்துள்ளது. ஆனால், சில முக்கிய விஷயங்களில் மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படாததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.இந்நிலையில், 8-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் குழுக்கூட்டம் கடந்த இரு நாட்களாக டெல்லியில்நடந்தது.

இழுபறி

இந்த கூட்டத்தில், ஆண்டுக்கு ரூ.1.50 கோடி வருவாய் ஈட்டி வரி செலுத்தும் பிரிவினரை மாநில ஜி.எஸ்.டி. வரம்பு? அல்லது மத்திய ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவருவதா? என்பதில் மாநிலங்கள், மத்தியஅரசுக்கு இடையே இழுபறி நீடித்தது.

மேலும், ஜி.எஸ்.டி. வரிவருவாயை பகிர்ந்து கொள்ளுதலில் மாநிலங்கள் அதிக பங்குகளை கேட்கின்றன, மாநிலங்களின் கடற்பகுதிகளுக்குள் வரும் சரக்குகப்பல்களுக்கு வரி வசூலிக்கும் உரிமை ஆகியவற்றிலும் மாநில அரசுகள் உரிமை கோருகின்றன. இதனால், இந்த முறையும் முடிவு ஏதும் எட்டப்படாமல் ஜி.எஸ்.டி. குழுக் கூட்டம் முடிந்தது.

பாக்ஸ் மேட்டர்...

செப்டம்பர் தான் நடைமுறைக்கு வரும்

இதுகுறித்தது கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறுகையில், “ ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்துவதால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளை  ஈடு செய்தல், ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யில் மாநிலங்கள் பங்கேற்பது ஆகியவற்றில் முடிவு எட்டப்படவில்லை.

அடுத்து வரும் காலங்களில் அதிகநேரம் பணியாற்றினால்தான் செப்டம்பர் மாதத்துக்குள் ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்த முடியும். இது புதிய வரி, குழப்பமான சரத்துக்கள் உள்ளன. முழுமையாக தயாரான பின்தான் இதில் இறங்க வேண்டும்.

மாநில அரசுகள் வரி வருவாயில் 60:40 பங்கு ேகட்கின்றன. அதற்கு மத்தியஅரசுமறுக்கிறது. 4 வகையான வரிகளை அரசு கொண்டு வந்துள்ளது.  அதிகபட்சமாக 28சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.  வரிவருவாயை பிரிப்பதிலும் கருத்து ஒற்றுமை இல்லை. என் கணிப்பின்படி ஏப்ரல் மாதம் ஜி.எஸ்.டி. நடைமுறைக்குவராது. செப்டம்பர் மாதம்தான் நடைமுறைக்கு வரும் '' எனத் தெரிவித்தார்.