வாகன ஓட்டிகள், தங்கள் எரிபொருள் தொட்டிகளை அதிகபட்ச கொள்ளளவிற்கு நிரப்ப வேண்டாம் என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.

தகவல் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலக்கட்டத்தில் நமது ஓய்வு நேரங்களில் சமூகவலைதளங்களே பெரும்பாலும் ஆக்கிரமித்துள்ளன. சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு வகையான போலி செய்திகள் வைரலாகி வருகின்றன. ஒவ்வொரு சூழலுக்கு ஏற்றவாறு போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. உதாரணமாக கோவிட் காலத்தில், பல்வேறு போலி செய்திகள் பரவியது. அதே போல் மத்திய அரசு, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு போலி தகவல்களும் பரவி வருகின்றன.

மறுபுறம் வேறொரு நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்பது போன்ற செய்திகள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த செய்தியில், வாகன ஓட்டிகள், தங்கள் எரிபொருள் தொட்டிகளை அதிகபட்ச கொள்ளளவிற்கு நிரப்ப வேண்டாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பிரபல பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. தலைதெறிக்க ஓடிய மாணவர்கள் - பரபரப்பு சம்பவம்

அதில் “ வாகன உரிமையாளர்களை தங்கள் கார்களின் எரிபொருள் தொட்டிகளை அதிகபட்ச வரம்பிற்குள் நிரப்ப வேண்டாம். வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் மற்றும் முழு தொட்டி வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவு பல சமூக ஊடக பயனர்களால் பகிரப்பட்டு வருகிறது. 

இருப்பினும், இந்த தகவல் போலியானது என்றும், தவறானது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பத்திரிகை தகவல் பணியகமான PIB-ன் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள PIB “ உங்கள் வாகனத்தில் அதிகபட்ச வரம்பிற்குள் பெட்ரோல் நிரப்ப வேண்டாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டதாக பரவும் செய்தி போலியானது..” என்று குறிப்பிட்டுள்ளது. 

Scroll to load tweet…

உரிமைகோரல்: அதிகபட்ச வரம்பிற்குள் உங்கள் வாகனத்தில் பெட்ரோலை நிரப்ப வேண்டாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது

உண்மை: செய்தி போலியானது மற்றும் தவறானது. உற்பத்தியாளரால் குறிப்பிடப்பட்ட வரம்பு (அதிகபட்சம்) வரை வாகனங்களில் எரிபொருளை நிரப்புவது முற்றிலும் பாதுகாப்பானது.

அதே போல் இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த செய்தியை மறுத்து ட்வீட் செய்துள்ளது. அதில் “ குளிர்காலம் அல்லது கோடைகாலத்தைப் பொருட்படுத்தாமல் உற்பத்தியாளரால் குறிப்பிடப்பட்ட வரம்பு (அதிகபட்சம்) வரை வாகனங்களில் எரிபொருளை நிரப்புவது முற்றிலும் பாதுகாப்பானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இணையத்தில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளை தடுக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் PIB கடந்த 2019- ம் ஆண்டு உண்மை சரிசார்ப்பு பிரிவை தொடங்கியது. சமூக ஊடக தளங்களில் பரவும் போலி மற்றும் தவறான தகவல்களை அடையாளம் காண்பதே அதன் நோக்கம். எனவே இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்திகள் ஏதேனும் வந்தால் அதன் நம்பகத்தன்மையை தெரிந்து கொள்ளலாம். PIBன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://factcheck.pib.gov.in/ செய்தியின் உண்மை தன்மையை சரிபார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பகுதி நேர வேலை மோசடி: யூடியூப் வீடியோவை லைக் செய்ததால் ரூ. 24 லட்சத்தை இழந்த பெண்..