பகுதி நேர வேலை மோசடி: யூடியூப் வீடியோவை லைக் செய்ததால் ரூ. 24 லட்சத்தை இழந்த பெண்..
பகுதி நேர வேலை மற்றும் அதிக சம்பளம் என்று கூறி சைபர் குற்றவாளிகள் நூதன மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளையே நம்பி உள்ளனர். இண்டர்நெட் பேங்கிங், போன் பேங்கிங், யுபிஐ போன்ற வழிகளில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை நம் வேலையை எளிதாக்கி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. சைபர் மோசடி மூலம் சைபர் குற்றவாளிகள் லட்சக்கணக்கான பணத்தை திருடி வருகின்றனர்.
அந்த வகையில் தற்ஓது சமூக வலைதளங்களில் புதிய வேலை மோசடி ஒன்று பரவி வருகிறது. பகுதி நேர வேலை மற்றும் அதிக சம்பளம் என்று கூறி நூதன மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் மோசடி செய்தியை அனுப்புகின்றனர்.
கடந்த சில மாதங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் புனேவில் இருந்து இரண்டு வெவ்வேறு நபர்கள் பகுதி நேர வேலை மோசடியில் விழுந்து மொத்தம் ரூ 33 லட்சத்திற்கும் அதிகமாக இழந்துள்ளனர்.
இதையும் படிங்க : 18 மாத குழந்தைக்கு பூச்சியை உணவாக கொடுக்கும் தாய்.. என்ன காரணம் தெரியுமா..?
கண் மருத்துவராகப் பணிபுரியும் ஒரு பெண் ஒருவர், மார்ச் 28 முதல் ஏப்ரல் 22 வரை சைபர் குற்றவாளிகளிடம் ரூ.23.83 லட்சம் பணத்தை இழந்தார். சில YouTube வீடியோக்களை லைக் செய்ய வேண்டும் உள்ளிட்ட சில ஆன்லைன் பணிகளைச் செய்வதால் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற வாக்குறுதியின் பேரில் கண் மருத்துவர் மோசடியில் சிக்கினார்.
போலீசார் இதுகுறித்து பேசிய போது “ பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக மெசேஜ் வந்துள்ளது. இந்த வேலையைப் பற்றி மேலும் அறிய, பாதிக்கப்பட்டவர் அந்த நபரைத் தொடர்பு கொண்டார். பின்னர் பகுதி நேர வேலைக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தார்.
பணிகள் தொடங்கியவுடன், மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவருக்கு யூ டியூப் வீடியோக்களில் உள்ள 'லைக்' பட்டனை கிளிக் செய்வது போன்ற எளிய பணிகளை வழங்கினர். இந்த பணிகளை முடித்ததற்காக பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10,275 கொடுக்கப்பட்டது.
பின்னர், அவர்களின் கிரிப்டோகரன்சி திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று மோசடி நபர்கள் உறுதியளித்தனர். எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையில், அந்தப் பெண் பணத்தை டெபாசிட் செய்ய ஒப்புக்கொண்டார், பின்னர் இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு ரூ.23.83 லட்சத்தை மாற்றினார்.
பாதிக்கப்பட்ட பெண் தனது கிரிப்டோகரன்சி முதலீட்டை திரும்பப் பெற முடிவு செய்தபோது, மோசடி செய்பவர்கள் கூடுதலாக ரூ.30 லட்சம் கேட்டனர். இருப்பினும், அவர் பணம் செலுத்த மறுத்துவிட்டார். பின்னர், மோசடி செய்பவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.. அதன்பிறகே, தான் ஆன்லைன் மோசடியில் சிக்கியதை உணர்ந்தார்..” என்று தெரிவித்தனர்.
இதே போல் புனேவில் உள்ள தெர்கானைச் சேர்ந்த 33 வயது பொறியாளர் ஒருவர், 'யூ டியூப் வீடியோவுக்கு லைக் செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற செய்தியை நம்பி, ஏப்ரல் 14 முதல் 20ஆம் தேதி வரை ரூ.8.96 லட்சத்தை இழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பேசிய போலீசார் பாதிக்கப்பட்ட நபருக்கு ஏப்ரல் 12 அன்று ஒரு பகுதி நேர வேலை என்று கூறி வீடியோக்களை லைக் செய்தால், ஒரு லைக்கிற்கு ரூ.50 சம்பாதிக்கலாம் என்றும், ஒரு நாளைக்கு ரூ.5,000 வழங்குவதாக ஒரு செய்தி வந்தது. ப்ரீபெய்டு பணிகளில் முதலீடு செய்தால், 30 சதவீதம் லாபம் ஈட்டலாம் என்றும் கூறப்பட்டது. அதிக பணம் சம்பாதிக்கும் என்ற ஆசையில் அந்த நபர் வழிமுறைகளைப் பின்பற்றி, சில மணிநேரங்களில் 500 ரூபாய் சம்பாதித்தார்.
பின்னர் பொறியாளருக்கு ஒரு இணைப்பு அனுப்பப்பட்டு, அந்த இணைப்பு வழியாக வீடியோக்களை விரும்புமாறு கூறப்பட்டது. அவர்களை நம்பி, பொறியாளர் அவருக்கு வழங்கப்பட்ட UPI ஐடிக்கு ரூ.12,000 பரிமாற்றம் செய்தார். அவர் ரூ.16,000 சம்பாதித்தார். அவர் ஏப்ரல் 14 அன்று மூன்று பரிவர்த்தனைகள் மூலம் ரூ.5 லட்சத்தை அனுப்பினார்.
பின்னர், தனது பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால், மேலும் பணம் அனுப்ப வேண்டும் என்று மோசடி நபர்கள் கூறினர். தனது பணத்தை மீட்பதற்கான நம்பிக்கையில், பாதிக்கப்பட்டவர் ஏப்ரல் 19 ஆம் தேதி புதிய குழுவில் சேர்ந்து, ஏப்ரல் 20 ஆம் தேதி 7பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 3.96 லட்சத்தை மாற்றினார். மொத்தம் ரூ.8.96 லட்சத்தை மோசடி செய்தவர்களிடம் இழந்தார்..” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த 2 சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் மோசடி செய்பவர்களால் தொடர்பு கொள்ளப்பட்டனர். அனைத்து தகவல்தொடர்புகளும் மெசேஜிங் செயலிகள் மூலம் செய்யப்பட்டன. இந்த மோசடி வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பலர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்துள்ளனர். எனவே மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடிகளில் இருந்து தப்பிக்க உதவும் டிப்ஸ்
- நிறுவனத்தின் விவரங்களை சரிபார்க்க ஒரு பதவிக்கு விண்ணப்பிக்கும் முன் நிறுவனத்தை ஆராயுங்கள்.
- சட்டவிரோத வேலைகளைத் தவிர்க்க இணையதளங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை சரிபார்க்கவும்.
- அடையாளம் அல்லது வங்கிக் கணக்கு எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை வழங்கும் போது கவனம் தேவை.
- நிறுவனம் பற்றிய புகார்களுக்கு ஆன்லைன் மன்றங்கள் மற்றும் மதிப்பாய்வு தளங்களைச் சரிபார்க்கவும்.
- தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளில் எச்சரிக்கையாக இருங்கள்; கார்ப்பரேட் மின்னஞ்சலில் இருந்து முறையான ஆட்சேர்ப்பு செய்பவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.
- சட்டப்பூர்வ முதலாளிகள் ஒருபோதும் வேலை பெற பணம் அனுப்பும்படி கேட்க மாட்டார்கள்.
- பணத்தை ஏற்கவோ மாற்றவோ வேண்டாம்; ஆன்லைன் மோசடி செய்பவர்கள் அவர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று அதை வேறு யாருக்காவது அனுப்பும்படி கேட்கலாம், ஆனால் இந்தப் பணம் பொதுவாக திருடப்படும்.
இதையும் படிங்க : உள்நாட்டு போரால் உச்சக்கட்ட பதற்றம்.. சூடானில் உள்ள இந்தியர்களின் நிலை என்ன..?