தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக தனது கூட்டணியைத் தொடர, அதிமுக புதிய கூட்டணியை உருவாக்க முயற்சிக்கிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி மக்கள் யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
ADMK EPS Election Plan : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலத்திற்கும் குறைவான நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு களம் இறங்க தயாராகி வருகிறது. அந்த வகையில், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியை உறுதி செய்து வருகிறது. ஆளுங்கட்சியான திமுக கூட்டணி கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக மற்றும் ஒரு சில சிறிய கட்சிகளும் இடம்பிடித்துள்ளது. மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அடுத்தாக தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி திட்டம்
அதே நேரம் அதிமுகவானது திமுகவை வீழ்த்தும் வகையில் புதிய பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க காய் நகர்த்தி வருகிறது. இதற்காக முதலில் விஜய்யோடு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், விஜய் தனி அணியாக களத்தில் இறங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாஜகவை தங்கள் அணிக்கு இழுத்த அதிமுக அடுத்ததாக பாமக மற்றும் தேமுதிகவிற்கு காய் நகர்த்தி வருகிறது. இதில் பாமக அதிமுக கூட்டணியில் இணையும் என தகவல் கூறப்படுகிறது. ஆனால் தேமுதிகவோ அதிமுக மீது அதிருப்தியில் உள்ளது.
எனவே கூட்டணி தொடர்பாக ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என தேமுதிக தெரிவித்து விட்டது. இந்த சூழ்நிலையில் அதிமுகவை வலுப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி புதிய வியூகத்தை வகுத்துள்ளார். அந்த வகையில் மக்கள் யாத்திரை என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி திட்டம் வகுத்துள்ளார். இந்த சுற்றுபயணம் ஜூலை மாதம் மத்தியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி வெற்றி நடை போடும் தமிழகமே என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
மக்கள் யாத்திரையை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி
அதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே அதே பாணியில் மக்கள் யாத்திரை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதை போல எதிர்கட்சி தலைவராக இருந்த போது திமுக தலைவர் ஸ்டாலின் நமக்கு நாமே என்ற தலைப்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள மக்கள், தொழில் துறையினர், மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட பலரையும் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றிருந்ததார். எனவே அதே பாணியில் மக்களை நேரில் சந்தித்து திமுக ஆட்சி மீதான குறைகளை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டவுள்ளதாக கூறப்படுகிறது.


