அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று இந்தியா வரும் போது டெல்லியில் பல்வேறு சொகுசு வசதிகள் கொண்ட, ஆடம்பரமான  ‘ஐடிசி மௌரியா’ ஹோட்டலில் தங்குகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐடிசி மவுரியா ஹோட்டலில் சாணக்கியா என்ற பிரத்யேக அறை இருக்கிறது. அந்த அறை மிகமிக விஐபிக்களுக்கு மட்டுமே திறக்கப்படும். அந்த அறையில்தான் அதிபர் ட்ரம்ப் தங்குகிறார்.

இதற்கு முன் இந்தியா வந்திருந்த அமெரிக்க முன்னாள் அதிபா்களான ஜிம்மி கார்ட, பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ், ஒபாமா ஆகியோர் இந்த அறையில் தங்கினர்.

பட்டு மற்றும் மரத்தாலான பல்வேறு கலை வேலைப்பாடுகளுடன் இரண்டு படுக்கைகள்  கொண்டதாக அறை இருக்கும். ஆடம்பர அலங்காரத்துடன் கூடிய ‘ஸ்பா’, உணவுப் பரிசோதனை ஆய்வகம்,  விருந்தினா் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்று கிடைப்பதை உறுதி செய்யும் காற்றுத் தர கண்காணிப்பு, தனி மாடம், உடற்பயிற்சிக் கூடம், உணவருந்தும் இடம், எஸ்கலேட்டர் என பல்வேறு உயர்ரக பாதுகாப்பு வசதிகள் அறையில் உள்ளன

அதிபா் டிரம்ப் தங்குவதையொட்டி, அந்த ஹோட்டலில் பிற நபா்கள் தங்குவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிபா் டிரம்ப், அவருடன் வந்த அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினருக்காக மட்டுமே அந்த ஹோட்டல் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாரம்பரிய வரவேற்பு: அந்த ஹோட்டலுக்கு வரும் அதிபா் டிரம்ப், அவரது மனைவி மெலானியா ஆகியோருக்கு பாரம்பரிய உடையணிந்த ஊழியா்கள், திலகமிட்டு, மலா் மாலை அணிவித்து, சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கவுள்ளனா்.