Asianet News TamilAsianet News Tamil

`ஜன் தன்' வங்கி கணக்குகளில் டெபாசிட் 87 ஆயிரம் கோடியாக உயர்வு

deposit increase-in-jandan-account
Author
First Published Jan 1, 2017, 9:03 PM IST


`ஜன் தன்' வங்கி கணக்குகளில் டெபாசிட் 87 ஆயிரம் கோடியாக உயர்வு
 

கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் ரத்துச் செய்யப்பட்டதற்கு பின், இந்த 45 நாள்களில் `ஜன் தன்' கணக்குகளில் போடப்பட்ட டெபாசிட் தொகை ரூ. 87,000 கோடியாக உயர்ந்துள்ளது.

4.86 லட்சம் `ஜன் தன்' கணக்குகளில் ரூ. 30,000 முதல் 50,000 வரை கடந்த நவம்பர் 30-ந் தேதி வரை டெபாசிட் செய்யப்பட்டது. இவ்வாறு டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் மொத்த அளவு ரூ. 2,022 கோடி ஆகும்.

நவம்பர் 10 முதல் டிசம்பர் 23 வரையிலான காலத்தில், மொத்தம் உள்ள 48 லட்சம் ஜன் தன் கணக்குகளில் மொத்தம் 41,523 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 9-ந் தேதி மட்டும் ரூ. 45,637 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகையையும் சேர்த்து ஒட்டுமொத்த தொகை ரூ. 87,000 கோடி ஆக உள்ளது.

ஜன் தன் வங்கி கணக்குகளில் இடப்பட்டுள்ள டெபாசிட்டுகள் குறித்து சிறப்பு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

நவம்பர் மாத இரண்டாவது வாரத்தில் மிக உயர்ந்த அளவு டெபாசிட்டுகள் வந்தன. அப்பொழுது முதல் வாரத்தில் மட்டும் ரூ. 20,224 கோடி டெபாசிட் செய்யப்பட்டது.

முதல் இரண்டு வாரங்களுக்குப் பின் டெபாசிட் வருகை ரூ.5000 கோடிக்கும் குறைவாகப் போய்விட்டது. அதற்குப் பின்னர் ரூ.1000 கோடிக்கும் குறைவாகவே வந்தது என ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜன் தன் கணக்குகளில் ரூ. 50,000 மட்டுமே டெபாசிட்டாக செலுத்தலாம் என்று நவம்பர் 18-ந் தேதி அரசு கூறியது. ஜன் தன் கணக்கு உரிமையாளர்கள் தங்கள் கணக்குகளில் மற்றவர் பணம் போட அனுமதித்தால் அவர்கள் மீது வருமான வரிச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது.

கறுப்பு பணத்தை வெளுப்பாக்க இந்த ஜன் தன் வங்கி கணக்குகளை பயன்படுத்துவதாக வந்த புகார்களின் அடிப்படையில்தான் ரூ. 50,000 வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

கடைசியாக வங்கி வட்டாரங்களில் கிடைத்த தகவலின்படி, டிசம்பர் 12 வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளாக ரூ.12.10 லட்சம் கோடி வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது. மொத்த பணப் புழக்கத்தில் 86 சதவீதமாக இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.15.45 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios