Asianet News TamilAsianet News Tamil

கண்ணா இதுவரை டிரைலர்தான்...!!! - வெடிக்க போகுது 1 ஆம் தேதி சம்பள பிரச்சனை

demonetisation salary
Author
First Published Nov 28, 2016, 6:47 PM IST


நவம்பர் மாத சம்பளம் ரொக்கமாகக் கிடைக்குமா? இப்போது இதுதான் நாட்டில் ‘ஹாட் டாபிக்’ . அனைத்து அரசு ஊழியர்கள் மட்டுமின்றி தனியார் ஊழியர்களும் தங்களுக்குள் கேள்வி கேட்டு தவித்து  கூறி வருகிறார்கள். 

 

 டிசம்பர் 1-ந்தேதி பிறப்பதற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து நடுத்தர, உயர்நடுத்தர, மற்றும் ஏழை குடும்பங்கள் மத்தியில் செலவுப்பட்டியல் வரிசையாக வந்து கண்முன்னே நிற்கிறது. 

demonetisation salary

தனியார், மற்றும் அரசு ஊழியர்களின் வங்கிக்கணக்கில் பணம் வந்து சேர்ந்துவிடும், இதை எப்படி அனைத்து சில்லறை  செலவுகளுக்கும் பிரித்துக் கொடுப்பதுதான் இன்றைய பிரச்சினையாக எழுந்து இருக்கிறது. 

 

கடந்த 8-ந்தேதி பிரதமர் மோடி ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு வெளியானதில் இருந்து, அனைத்து தரப்பினரும் பணத்தை தங்கம் போல எண்ணி ‘பார்த்துப்  பார்த்து’ செலவு செய்கிறார்கள்.

இந்த அறிவிப்பால் பணக்காரர்கள் பாதிக்கப்படவே இல்லை என்பதற்கு வங்கிகளிலும், ஏ.டி.எம். வாசல்களிலும் நின்ற சாமானிய மக்களே சாட்சி. திடீரென ஏற்படும் மருத்துவச் செலவுகள், வீட்டு வாடகை, பள்ளிக்கட்டணம், திருமணம் என அத்தியாவசியச் செலவுக்கு பணம் இல்லாமல் மக்கள் கடந்த 20 நாட்களாக அல்லாடுகிறார்கள். 

 

ஏ.டி.எம்., வங்கி வாசல்களில் வரிசையில் நின்று வதங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் வரிசையில் நிற்கும் முதியோர் நிலைதான் பரிதாபம், காலையில் இருந்து   பலமணி நேரம் வரிசையில் நின்று ஏ.டி.எம். எந்திரத்தை நெருங்கும் போது பணம் தீர்ந்துவிட்டது என்று சொன்னவுடன் உடைந்து அழுது, கண்ணீர் விடும் காட்சியை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. 

demonetisation salary

 ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ஆயிரக்கணக்கில் பணம் இருந்தும் அவசரத்துக்கு கூட எடுக்க முடியவில்லை. நாம் உழைத்து சேமித்த பணத்துக்கு, அரசு ‘ரேஷன்’ வைத்து பணம் கொடுக்கிறதே என மக்கள் புலம்புகிறார்கள். 

 

 அன்றாடச் செலவுக்கே வங்கிகள், ஏ.டி.எம். வாசல்களில் மணிக்கணக்கில் மக்கள் காத்துக்கிடந்தார்கள். சிலர் வேறு வழியே இல்லை என்று அலுவலகத்துக்கு விடுமுறை போட்டு பணத்துக்காக வரிசையில் நின்ற கதையும் நடந்தது. 

எல்லாம் அடுத்த வரும் நாட்களில் சரியாகி விடும் பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் வார்த்தைகளில் மட்டுமே மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். 

 

 ஆனால், இன்னும் மக்களின் பணப்பற்றாக்குறையைத் தீர்க்க தீர்க்கமான நடவடிக்கை போதுமான அளவில் இல்லை.

125 கோடி மக்கள்  பயன்படுத்துவதற்கு  2.22 லட்சம் ஏ.டி.எம்.கள் மட்டுமே இருக்கின்றன. யானைப் பசிக்கு சோளப்பொறியா?.

அதிலும் ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுகள் வைக்குமாறு மறுசீரமைக்கும் பணி முடிந்து, 85 ஆயிரம்  ஏ.டி.எம்.கள் மட்டுமே தயார் நிலையில் இருப்பதாக மத்திய பொருளாதாரத்துறை செயலாளர் சக்தி கந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

demonetisation salary

ஆக, 85 ஆயிரம் ஏ.டி.எம்.களில் மட்டுமே மக்கள் ரூ.100, ரூ.500, ரூ2000 நோட்டுகளைப் பெற முடியும். மற்ற ஏ.டி.எம்.களில் ரூ.100 மட்டுமே பெற முடியும். 

 

இப்போது பிரச்சினை என்ன வென்றால், கடந்த 8-ந்தேதி பிரதமர் மோடி ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பை வெளியிடும் போது பெரும்பாலான வீடுகளில் அந்த மாதத்துக்கான அத்தியாவசிய செலவுகளான பால், வேலைகாரர்கள் ஊதியம், மின்கட்டணம், கேபிள், மளிகை பொருட்கள், குழந்தைகளின் கல்விக்கட்டணம், பஸ் கட்டணம் ஆகியவற்றை ஓரளவுக்கு செலுத்தி இருந்தார்கள்.


ஆனால், டிசம்பர் 1-ந்தேதி முதல் இதே செலவுகள் கண்முன் தோன்றும் அப்போது சில்லறைச் செலவுகளுக்கு வங்கிகள் அல்லது. ஏ.டி.எம்.களை  மக்கள் நாட வேண்டும். 

 

இப்படி  நாடு முழுவதும்  உள்ள அனைத்து அரசு மற்றும், தனியார் ஊழியர்களும் ஒரே மாதிரியாக சிந்தித்து ஏ.டி.எம். வங்கி வாசல்களில்  போய் நின்றால் என்னவாகும். மக்கள் வெறுப்பின் உச்சத்துக்கே சென்று, படுபயங்கரமான ‘களேபரங்கள்’ அரங்கேறும்.


அதிலும் நாள் ஒன்றுக்கு ஒரு நபர் ரூ.2.500 மட்டுமே ஏ.டி.எம்களில் இருந்து எடுக்க வேண்டும், வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே வங்கிக்கணக்கில் இருந்த எடுக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடு  மக்களை இன்னும் வெறுப்பின் உச்சத்துக்கு கொண்டு செல்லும். 

அதே முன்கூட்டியே உணர்ந்து தான் உச்சநீதிமன்றம், மக்களை துன்புறுத்தாதீர்கள், நிலைமை மோசமாக இருக்கிறது, கலவரங்கள் வெடிக்கலாம் என எச்சரிக்கை விடுத்தது.

demonetisation salary

 அந்த சூழல் 1-ந்தேதிக்கு பின் எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்காத் தான், ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு மீதான அனைத்து மனுக்கள் மீதான விசாரணையை டிசம்பர் 2-ந்தேதி விசாரிப்பதாகத் தெரிவித்தது. 

 

மத்திய அரசில் ஊழியர்கள்  46 லட்சம் பேர், ஓய்வு ஊதியம் பெறுவோர் 55 லட்சம் பேர் என ஒரு கோடிக்கும் மேலானவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு மத்திய அரசு தரப்பில் ரூ.15 ஆயிரத்து 350 கோடி ஊதியமாக  1-ந்தேதி வரவு  வைக்கப்படும்.  அப்போது  பணத்தேவை ஒரே மாதிரியாக 1-ந்தேதி எழும். 

 

  இவர்கள் தவிர்த்து 48 கோடி பேர் தனியார் நிறுவன ஊழியர்கள்,அதில் 27கோடி பேர் கார்ப்பரேட் ஊழியர்கள்  இருக்கிறார்கள்  என மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இது போக தமிழக அரசில் 14 லட்சம் ஊழியர்கள், 7 லட்சம் பேர் ஓய்வூதியதாரர்கள். இவர்களுக்கும் வங்கிக்கணக்கில் தான் ஊதியம் வரவு வைக்கப்படும். 

 

ஆக இவர்களில் அரசு ஊழியர்கள் தவிர்த்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 7-ந்தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட்டு விடும் என்பால், பணத்தேவை டிசம்பர் முதல்வாரத்தில் எகிறிவிடும். 

ஆக, ஒட்டுமொத்தமாக அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் அத்தியாவசியச் செலவுக்காக 1-ந் தேதிக்கு மேல் ஏ.டி.எம்., வங்கிகளை நாடும் போதுதான் உச்சகட்ட கூத்து அரங்கேறும்.

ஒவ்வொரு ஏ.டி.எம். வங்கிகளின் வாசல்களில் மக்கள் சந்தைக் கடையைப் போல் கூட்டமாக கூட்டமாக கூடும் போதுதான், என்ன மாதிரியான விளைவுகளை உண்டாகும், மக்கள் எந்த அளவுக்கு பொறுமை காப்பார்கள் என்பது தெரியவரும். 

 

இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள, சமாளிக்க  அரசும், வங்கி நிர்வாகமும் எப்படி தயாராகி இருக்கின்றன என்பது படு சஸ்பென்சாக இருக்கிறது.தமிழகத்துக்கு ரூ.300 கோடி வந்துவிட்டதாகவும், கடந்த  21-ந் தேதி வரை ரூ.1.36 லட்சம் கோடி பணம் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது  என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது.

ஆனால், மக்களிடமிருந்து ரூ.6 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்கு டெபாசிட் களாக வந்துள்ள என்று பிரதமர் மோடி கூறுகிறார். 

 

இந்நிலையில்,  மக்களிடமிருந்து அதிக அளவு பணம் பெறப்பட்டு, குறைந்த அளவு உள்ளீடாக  ரூ.1.36 லட்சம் கோடி  பணம் மக்களின் தேவையை  எப்படி  நிறைவு செய்யும்.

 

எந்த அளவுக்கு மக்களிடமிருந்து பணம் டெபாசிட் செய்யப்பட்டதோ அல்லது திரும்பப் பெறப்பட்டதோ அதே அளவுக்கு சந்தையில் அல்லது வங்கிகளில்  புதிய ரூபாய் நோட்டுகள் கொண்டு சேர்க்கப்பட்டால் தான் மக்கள் பணப்பற்றாக்குறையின்றி இருப்பார்கள்.ஆனால், மூன்றில் ஒரு பங்கு பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு தேவையை நிறைவு செய்துவிடலாம் என மத்திய அரசு கூறுவது  இயலாத காரியும்.


கேட்டால், காசோலை மூலம் பரிவர்த்தனை செய்யுங்கள், டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பரிவரித்தனை செய்யுங்கள் என்று மத்திய அரசு பாட்டாய் பாடுகிறது.வீட்டு வாடகை, பள்ளிக்கட்டணத்தை காசோலையில் கட்டலாம் என்று மக்களுக்கு அரசு அறிவுரை கூறுகிறது.ஆனால், வாடகை வீட்டில் வசிப்போரும், பெற்றோர்களும் கொடுக்கும் காசோலையை எத்தனை வீட்டு உரிமையாளர்கள், பள்ளி நிர்வாகங்கள் ஏற்றுக்கொள்வார்கள்.?.

 

வீட்டு வேலைசெய்பவர்களும், தள்ளுவண்டியில் காய்கறி விற்போரும், மளிகை கடை அண்ணாச்சியும் காசோலை வாங்கிக் கொள்வார்களா? அன்றாடம் செய்யும் அனைத்து சில்லரை செலவுக்கும் காசோலை பயன்படுத்த முடியுமா?.கடந்த 20 நாட்களாக மக்கள் பணம் எடுப்பதில் மட்டுமல்ல அதை செலவு செய்வதிலும் பல பிரச்சினைகளை சந்தித்து விட்டார்கள். ஒவ்வொரு செலவுக்கும் மீதி சில்லறை வாங்குவதற்குள் ‘போதும் போதும்’ என்றாகிவிட்டது.

ஒவ்வொரு மாதமும் மாதத்தின் பிற்பகுதியில்தான் மக்களுக்கு  பணப்பிரச்சினை ஏற்படும் என்றால், இந்த மாதம் தொடக்கத்திலேயே பணப்பிரச்சினை ‘தலைவிரித்து ஆடப்’ போகிறது. 

 

இதில் மத்திய அரசுக்கு ஒத்துப்போகாத, அதாவது பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறாத மாநில அரசுகள், அதாவது மேற்கு வங்காளம், ஓடிசா, கேரளா மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியதத்தில் முன்பனமாக ரொக்கப்பணம் கொடுப்பதாக கூறி இருக்கின்றன. 

 

அதேசமயம், தமிழகத்தின் நிலைமையும் இன்னும் ஒன்றும் தெரியாமல் உள்ளது. டிசம்பர் 1-ந்தேதி தொடங்கும்போது தமிழகத்தில் குறிப்பாக நகர்புறங்களில் நடுத்தர மக்கள், மாத ஊதியம் பெறுவோர்,  மேன்சன்களில் தங்கி இருப்போர், பேச்சிலர்கள் என்ன பாடு படப்போகிறார்கள் என்பது தெரியவில்லை...

Follow Us:
Download App:
  • android
  • ios