சந்திரயான் 3, புதன்கிழமை மாலை 6:04 மணியளவில் நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின்தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்தது.
இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமே உற்று நோக்கி இருந்த சந்திரயான்-3 புதன்கிழமை மாலை நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. லேண்டர் (விக்ரம்) மற்றும் ரோவர் (பிரக்யான்) ஆகியவற்றை உள்ளடக்கிய சந்திரயான் 3, புதன்கிழமை மாலை 6:04 மணியளவில் நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்தது.
சந்திரயான்-3 மிஷனின் 'விக்ரம்' லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தட்டையான பகுதியில் தரையிறங்கியது. 4 தரையிறங்கும் கால்களுடன், விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக அடைந்தவுடன், லேண்டிங் இமேஜர் கேமரா முதல் படத்தை பிடித்தது. சமூக வலைதளமான X-ல் இஸ்ரோ இதுகுறித்து பதிவிட்டுள்ளது.
மேலும் "சந்திரயான்-3 நிலவின் மேற்பரப்பில் ஒப்பீட்டளவில் தட்டையான பகுதியைத் தேர்ந்தெடுத்தது. லேண்டருக்கும் இங்குள்ள விண்வெளி ஏஜென்சியின் மிஷன் ஆபரேஷன் காம்ப்ளக்ஸ் (MOX) க்கும் இடையே ஒரு தகவல் தொடர்பு நிறுவப்பட்டது." என்றும் குறிப்பிட்டுள்ளது. MOX என்பது இஸ்ரோவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான் 3 வெற்றி.. நிலவில் வரலாற்று சாதனை படைத்து உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்தியா!
இந்த நிலையில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கிவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் பதிவில் “ சந்திரயான்-3 ரோவர்: இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. நிலவுக்காக உருவாக்கப்பட்டது. சந்திரயான் 3 ரோவர் லேண்டரில் இருந்து கீழே இறங்கியது. இந்தியா நிலவில் நடைபயணம் செய்தது! மேலும் அப்டேட் விரைவில்” என்று பதிவிட்டுள்ளது.
சந்திரயான்-3
சந்திரயான் -3 ஒரு உள்நாட்டு லேண்டர் தொகுதி, ஒரு உந்துவிசை தொகுதி மற்றும் ஒரு ரோவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கிரகங்களுக்கு இடையேயான பயணங்களுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல் மற்றும் நிரூபித்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கமாகும். நிலவின் தென் துருவப் பகுதிகளில் பனி மற்றும் மதிப்புமிக்க கனிம வளங்கள் இருக்கலாம் விஞ்ஞானிகள் மற்றும் வானியலாளர்கள் கருதுகின்றனர். எனவே இதுகுறித்து சந்திரயான் ஆய்வு செய்யும்.
மேலும் நிலவின் மேற்பரப்பு மட்டுமின்றி, துணை மேற்பரப்பு குறித்தும் சந்திரயான் 3 ஆய்வு செய்யும். சந்திரயான்-2-ன் ஆர்பிட்டர் இன்னும் நிலவை சுற்றி ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆர்பிட்டரைப் பயன்படுத்தி ரோவர் பூமியுடன் தொடர்பு கொள்ளும். நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து 100 கி.மீ தொலைவில் இருந்து படங்களை எடுத்து மேற்பரப்பு பகுப்பாய்வு நடத்தப்படும். மேலும் சந்திராயன்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது என்றும் கூறியிருந்தது. லேண்டர் மற்றும் ரோவர் 1 நிலவு நாளில் (சுமார் 14 பூமி நாட்கள்) அங்குள்ள சுற்றுப்புறங்களை ஆய்வு செய்யும்.
