தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்தது ஏன்? கர்நாடகாவில் காங். அரசைக் கண்டித்து பாஜக போராட்டம்
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் மாநில அரசின் முடிவைக் கண்டித்து மண்டியா மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆளும் காங்கிரஸ் அரசு எடுத்த முடிவு கர்நாடக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் மாநில அரசின் முடிவைக் கண்டித்து மண்டியா மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
சஞ்சய் சர்க்கிளில் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்று கூடி தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வழங்குவதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் கொடுக்கும் முடிவை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.சி.மோகன் மற்றும் பாஜக தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மானாவாரி பயிர்களை சாகுபடி செய்ய முடியாமல் பாசனத்திற்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் விவசாயிகள் படும் சிரமங்களைச் சந்திக்கிறார்கள் எனவும் வலியுறுத்தினர்.
கே.ஆர்.எஸ் அணையில் இப்போதைய நீர்மட்டம் அதிகபட்ச கொள்ளளவான 124.80 அடிக்கும் குறைவாக, 105.70 அடியாக உள்ள நிலையில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறப்பதால், கர்நாடகாவில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று போராட்டக்காரர்கள் கூறினர்.
மண்டியா, மைசூர், சாமராஜநகர், குடகு, ஹாசன் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். கர்நாடகாவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
மண்டியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் உடமைகளுக்கு தீ வைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தீயை அணைத்து போராட்டத்தை கட்டுப்படுத்தினர்.
சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நேரத்தில் சிறிய மாற்றம்: இஸ்ரோ தகவல்
தொடர் போராட்டங்களுக்கு இடையே கேஆர்எஸ் அணையில் இருந்து தமிழகத்துக்கு 12,631 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் இருந்து மொத்தம் 15,247 கனஅடியாக வெளியேற்றப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரிக்காத நிலையில், அணையில் 4,983 கனஅடி நீர் மட்டுமே உள்ளது.
அணையில் மொத்த நீர் 27.617 டிஎம்சி (ஆயிரம் மில்லியன் கனஅடி) தேக்கி வைக்கப்பட்டுள்ளது, அதன் முழு கொள்ளளவு 49.542 டிஎம்சி ஆகும்.
கேஆர்எஸ் அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக கூறுகின்றனர். கர்நாடக விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்காமல் தமிழகத்தின் நலன்களுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.