சந்திரயான்-3 விண்கலத்தின் கிளைமாக்ஸ் எப்படி இருக்கும்? சவாலான கடைசி 15 நிமிடத்தில் நடக்கப்போவது என்ன?
இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான்-3 ஆகஸ்ட் 23ஆம் தேதி (புதன்கிழமை) நிலவில் மென்மையாகத் தரையிறங்க, கடைசி 15 நிமிடங்களில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிக மிக முக்கியமானவை.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான்-3 ஆகஸ்ட் 23ஆம் தேதி (புதன்கிழமை) நிலவில் மென்மையாகத் தரையிறங்க முயற்சி செய்ய உள்ளது. இந்த முயற்சி வெற்றி அடைய கடைசி 15 நிமிடங்கள் மிக மிக முக்கியமானவை. அப்போது ஒவ்வொரு நொடியும் கவனமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு செயல்பாடும் மிகத் துல்லியமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
அனைத்தும் திட்டமிட்டபடியே நடந்துவிட்டால், அமெரிக்க, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பின் இந்தியாவும் நிலவில் மென்மையான தரையிறக்கம் செய்த நான்காவது நாடு என்ற பெருமைப் பெறும். அதுமட்டுமின்றி, முதல் முறையாக நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கிய சாதனையையும் படைக்கும்.
இதற்கெல்லாம் வழிவகுக்கும் அந்த கடைசி 15 நிமிடங்களில் என்ன நடக்கும்? என்னென்ன இக்கட்டான செயல்பாடுகளை இஸ்ரோ செய்ய இருக்கிறது? அதற்கு ஆயத்தமாக என்னென்ன கருவிகளும் திட்டங்களும் சந்திரயான்-3 இல் உள்ளன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
வெற்றிநடை போடும் சந்தியரான்-3! நிலவில் தரையிறங்குவதை பார்த்து ரசிக்க இஸ்ரோ சிறப்பு ஏற்பாடு!
முதல் கட்டம்:
இப்போது நிலவில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இருக்கும் விண்கலத்தை 7.4 கி.மீ. தொலைவுக்குக் கொண்டு வருவது தான் முதல் கட்டம். இதற்கு விண்கலத்தில் உள்ள சிறிய ராக்கெட்டுகளை இயக்கவேண்டும். அந்த ராக்கெட்டுகளை மெல்ல இயக்கத் தொடங்கியதும் விண்கலத்தின் வேகம் மணிக்கு 6000 கி.மீ.லிருந்து படிப்படியாகக் குறைந்துகொண்டே வரும். அப்படியே இறங்கி நிலவில் இருந்து 7.4 கி.மீ. தூரத்திற்கு வரும்போது விண்கலத்தின் வேகம் மணிக்கு 1,200 கி.மீ. அளவுக்கு வந்துவிடும். இது நடக்க சுமார் 10 மணிநேரம் ஆகும்.
இரண்டாவது கட்டம்:
இந்தக் கட்டத்தில் விண்கலம் 7.4 கி.மீ. தூரத்தில் இருந்து 6.3 கி.மீ. தொலைவுக்குக் கொண்டுவரப்படும். இந்த நிலையில், கிடைமட்டமாக இருக்கும் விண்கலம், தரையிறங்குவதற்கு வசதியாக, 50 டிகிரி கோணத்திற்கு சாய்வாகத் திருப்பப்படும். விண்கலம் தரையிறங்குவதை நோக்கிச் செல்லவேண்டிய திசையில் ஏதாவது மாற்றம் செய்யவேண்டுமா என்பதும் இந்தக் கட்டத்தில்தான் முடிவு செய்யப்படும்.
மூன்றாவது கட்டம்:
முன்றாவது கட்டத்தில் விண்கலம் 6.3 கி.மீ. தொலைவில் இருந்து 800 மீ. தூரத்திற்கு நகரும். இந்தக் கட்டத்தில் விண்கலம் மேலும் திருப்பப்பட்டு செங்குத்தான நிலைக்கு மாற்றப்படும். இந்த நிலையில், விண்கலம் முன்னோக்கி நகரும் வேகம் மணிக்கு 1,200 கி.மீ.லிருந்து பூஜ்ஜிய நிலைக்கு வந்துவிடும். இதனால், விண்கலம் மெல்ல மெல்ல இறங்கி 800 மீ உயரத்தை அடையும்.
சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நேரத்தில் சிறிய மாற்றம்: இஸ்ரோ தகவல்
நான்காவது கட்டம்:
அடுத்த கட்டத்தில் விண்கலம் 800 மீ உயரத்தில் இருந்து இறங்கி வந்து 150 மீ உயரத்தில் இருக்கும். இப்போது நிலவின் ஈர்ப்பு விசைக்குச் சமமாக நேர் எதிர்திசையில் ராக்கெட் விசையும் குறைக்கப்படும். இரண்டு விசைகளும் ஒரே அளவுக்கு இருப்பதால் விண்கலம் மேலும் கீழும் நகராமல் நிலையாக இருக்கும். இந்த நிலையில் விண்கலத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நிலவின் மேற்பரப்பில் உள்ள மேடு பள்ளங்களைத் துல்லியமாக கவனித்து, தரை இறங்குவதற்கு பாதுகாப்பான சமதளப் பரப்பைத் தேர்வு செய்யும்.
ஐந்தாவது கட்டம்:
பின்பு தேர்வு செய்த பாதுகாப்பான இடத்திற்கு பக்கவாட்டில் நகர்ந்து 150 மீ உயரத்தில் இருந்து 60 மீ உயரத்துக்கு மெதுவாக இறங்கி வரும். இப்போது விண்கலம் சரியாகத் தரையிறங்க வேண்டிய இடத்திற்கு வந்துவிடும்.
ஆறாவது கட்டம்:
இனி சிறிய ராக்கெட்டுகளின் விசையை மெதுவாகக் குறைக்கப்படும். ராக்கெட் விசை குறையக் குறைய நிலவின் ஈர்ப்பு விசை காரணமாக விண்கலம் கீழ்நோக்கி மிதந்து வரும். இந்த நிலையில், சந்திரயான்-3 இல் இரண்டு முக்கிய கருவிகள் செயல்பட்டு வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
விண்கலத்தில் உள்ள லேசர் கருவி (Laser Doppler Velocimeter) தரையை நோக்கி ஒரு லேசர் ஒளியை அனுப்பும். அது சென்று திரும்பும் வேகத்தை வைத்து, அதற்கு ஏற்ற வேகத்தில் விண்கலம் கீழே வரும். நிலவின் தரையை நோக்கி இருக்கும் பிரத்யேக கேமராவும் வேகத்தைக் கணிக்க பயன்படும். கேமரா காட்டும் தரைப்பரப்பு காட்சி எவ்வளவு வேகமாக பெரிதாகிக்கொண்டே வருகிறதோ அதற்கு ஏற்ப விண்கலத்தின் வேகம் குறைக்கப்படும். இப்படித்தான் 60 மீ தொலைவில் இருந்து 10 மீ உயரம் வரை விண்கலம் கொண்டுவரப்படும்.
சந்திரயான்-3 vs லூனா-25: நிலவின் தென்துருவத்தில் முதலில் தடம் பதிக்கப்போவது இந்தியாவா? ரஷ்யாவா?
ஏழாவது கட்டம்:
விண்கலம் 10 மீட்டர் உயரத்துக்கு வந்தவுடன் இயங்கிக்கொண்டிருக்கும் சிறிய ராக்கெட் எஞ்சின்கள் நிறுத்தப்படும். தரைக்குப் பக்கத்தில் எஞ்சின்கள் இயங்கினால் நிலவின் மேற்பரப்பில் தூசிப் படலம் உருவாகி, அது விண்கலத்தின் மீது படிந்து விரும்பத்தகாத பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக சூரிய ஒளி தகடுகள் மீது தூசி படிந்தால், தரையிறங்கிய பின்பு தேவையான சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியாத நிலை ஏற்படும். எனவே 10 மீ உயரத்தில் எஞ்சின்கள் நிறுத்தபடுகின்றன.
எஞ்சின்கள் நிறுத்தப்பட்டவுடன் விண்கலம் 10 மீட்டர் உயரத்தில் இருந்து தரையில் விழுந்துவிடும். இப்படி விழும்போது கீழ்நோக்கி வரும் வேகம் நொடிக்கு 2 மீ ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், நொடிக்கு 3 மீட்டர் வேகம் வரை இருந்தால்கூட விண்கலத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில் லேண்டரின் கால்கள் வலுவாக உருவாக்கப்பட்டுள்ளன.
எட்டாவது கட்டம்:
லேண்டர் தரையிறங்கியதும், இறங்கிய இடத்தில் அப்படியே நிற்கும். இறங்கும்போது எழுந்த தூசிப் படலம் அடங்குவதற்காக சில மணிநேரங்கள் வரை காத்திருக்கும். பின்பு லேண்டரில் உள்ள கதவு திறக்கப்படும். பின், அதற்குள் இருந்து தரை வரை நீளும் சரிவான பாதையில் பிரக்யான் ரோவர் இறங்கி வந்து நிலவின் தரையை அடையும்.
இறங்கியதும் பிரக்யான் ரோவர் தன்னைத் தாங்கி வந்த விக்ரம் லேண்டரை படம் பிடிக்கும். அதேபோல லேண்டரும் தான் நிலவில் தரையிறக்கிய ரோவரை படம் பிடிக்கும். இந்தியா நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியற்கு சாட்சியாக அமையப்போவது இந்த இரண்டு படங்கள்தான்.
ரஷ்யாவின் கனவு தகர்ந்தது! லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது!