சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நேரத்தில் சிறிய மாற்றம்: இஸ்ரோ தகவல்
சந்திராயன்-3 ஆகஸ்ட் 23, 2023 அன்று இந்திய நேரப்படி சுமார் 18:04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.
சந்திரயான்-3 வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 6:04 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மென்மையான தரையிறக்கத்தை உறுதிசெய்வதற்காக தரையிறங்கும் நேரம் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 5.45 மணிக்கு தரையிறங்குவதாக இருந்த நிலையில் 19 நிமிடம் கழித்து 6.04 மணிக்கு தரையிறங்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக இந்தியா நிலவில் மென்மையான தரையிறக்கம் செய்யும் என்று உலகமே சந்திரயான்-3 விண்கலத்தின் நகர்வுகளை உற்றுநோக்கி வருகிறது.
கர்நாடகாவில் டிஆர்டிஓ ட்ரோன் விபத்து; சோதனையின்போது நடந்த விபரீதம்
"சந்திராயன்-3 ஆகஸ்ட் 23, 2023 அன்று இந்திய நேரப்படி சுமார் 18:04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது. வாழ்த்துகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி! ஒன்றாக பயணத்தை அனுபவிப்போம்" என்று இஸ்ரோ ட்விட்டர் பதிவு ஒன்றில் கூறியுள்ளது.
இஸ்ரோ இணையதளம், அதன் யூடியூப் சேனல், பேஸ்புக் மற்றும் டிடி நேஷனல் தொலைக்காட்சியிலும் ஆகஸ்ட் 23, 2023 அன்று மாலை 5:27 முதல் நேரடி சந்திரயான்-3 தரையிறங்கும் காட்சியை ஒளிரப்பு செய்கிறது.
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வியாழன் அன்று உந்துவிசை தொகுதியிலிருந்து வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது. லேண்டரை தரையிறங்க ஆயத்தம் செய்யும் கடைசி உயரக்குறைப்பு நடவடிக்கை இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இப்போது லேண்டர் நிலவின் மேற்பரப்பில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று கருதப்படும் விக்ரம் சாராபாய் (1919-1971) நினைவாக சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டருக்கு விக்ரம் என்று பெயரிடப்பட்டது.
ஜூலை 14ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்தி ஒரு மாதம் ஆறு நாட்கள் ஆகிறது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 (எல்விஎம் 3) ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
ரஷ்யாவின் கனவு தகர்ந்தது! லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது!