நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.யின் அருவருப்பான பேச்சு; எதிர்க்கட்சிகள், சபாநாயகர் கடும் கண்டனம்
பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரியின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளன.
மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. டேனிஷ் அலி குறித்து பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி அருவருக்கத்தக்க வகையில் கீழ்த்தரமாக வார்த்தைகளைப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் ரமேஷ் பிதூரியின் இழிவான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளன.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் வெள்ளிக்கிழமை இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து அனைத்து கட்சி எம்பிக்களும் பேசினர். இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவிமன் தென்துருவத்தில் தரையிறங்கியதைக் குறிப்பிட்டு, இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பாராட்டினார்.
அப்போது பேசிய டெல்லி தெற்கு தொகுதி பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி பேசியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. சக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதும் மரியாதை காட்டாமல், மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். 'இஸ்லாமிய தீவிரவாதி', 'பயங்கரவாதி' என்று திரும்பத் திரும்பக் கூறிய அவர், "இந்த முல்லாவை வெளியே தள்ளுங்கள்" என்றும் ஆக்ரோஷமாகக் கூறினார்.
இதுமட்டுமின்றி நாடாளுமன்ற மாண்பையே சீர்குலைக்கும் விதத்தில் இன்னும் கீழ்த்தரமான ஆபாச வார்த்தைகளையும் அவர் கூறியிருக்கிறார். சபாநாயகர் பேச்சை நிறுத்திவிட்டு அமரும்படி பலமுறை கேட்டுக்கொண்டபோதும், அவர் தன் வெறுப்பைக் கக்கும் பேச்சைத் தொடர்ந்தார்.
அவர் இவ்வாறு பேசும்போது அருகில் அமர்ந்திருந்த பாஜக முன்னாள் அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் அதைக் கேட்டுச் சிரித்துக்கொண்டிருந்ததும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த நிகழ்வு முழுவதும் நேரலையில் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி இருக்கிறது
பிதூரியின் பேச்சுக்கு மக்களவையிலேயே பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்தார். "உறுப்பினர் கூறிய கருத்துகளால் எதிர்க்கட்சிகள் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார். இருந்தாலும்,அவர் அரை மனதுடன் மன்னிப்பு கேட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சித்தனர்.
கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்பட்டால் ரூ.500 அபராதம்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
ரமேஷ் பிதுரி பேசியபோது சபாநாயகராக இருந்த காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ், சர்ச்சைக்குரிய வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று கூறினார். இதுபோன்ற நடத்தையில் மீண்டும் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவும் எச்சரித்துள்ளார்.
வியாழன் மாலையில் இருந்து சமூக வலைத்தளங்களில் ரமேஷ் பிதுரியின் வெறுப்புப் பேச்சு பரவிவருகிறது. நான்கு எதிர்க்கட்சிகள் ரமேஷ் பிதூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளன. இவற்றில் மக்களவையில் அதிக எம்பிக்களைக் கொண்ட காங்கிரஸ், திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் அடங்கும்.
அனைத்து கடிதங்களிலும் ரமேஷ் பிதுரியின் நடத்தை மற்றும் கருத்துக்கள் தொடர்பான விவகாரம் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. திமுக எம்.பி. கனிமொழி, திரிணாமுல் எம்பி அபரூபா போத்தார், தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே ஆகியோரும் சபாநாயகருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பகுஜன் சமாஜ் கட்சி எம்பி குன்வர் டேனிஷ் அலியை சந்தித்து, எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி உடனான சந்திப்பு குறித்து டேனிஷ் அலி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். "என் மன உறுதியை அதிகப்படுத்தும் விதமாக ராகுல் காந்தி தன் ஆதரவை தெரிவிக்க இங்கே வந்திருந்தார். நான் தனியாக இல்லை என்றும் தன்னைப்போல அனைவரும் ஜனநாயகத்திற்கு ஆதரவாக நிற்கிறார்கள் என்றும் தெரிவித்தார்" என டேனிஷ் அலி ட்விட்டரில் கூறியிருக்கிறார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் சேரமாட்டேன் என்று கூறிவரும் நிலையில், ராகுல் காந்தியின் இந்தச் சந்திப்பு கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கண்டனத்திற்கு மத்தியில், பா.ஜ.க.வும் சர்ச்சை பேச்சு தொடர்பாக ரமேஷ் பிதூரியின் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் தனது நடத்தை குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.